பைகுல்லாவில் 9 மாத குழந்தையை கடத்திய பெண் சிக்கினார்
பைகுல்லாவில் 9 மாத குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
பைகுல்லாவில் 9 மாத குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
குழந்தை கடத்தல்
மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்தவர் ஹபிபுல். இவரது மனைவி நஸ்ரின்(வயது26). இவர்களுக்கு 9 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று மும்பை பைகுல்லாவில் நடந்த ஒரு பேரணியில் தம்பதி இருவரும் குழந்தையுடன் கலந்து கொண்டனர். அப்போது இளம்பெண் ஒருவர் நஸ்ரினிடம் இருந்த குழந்தையை வாங்கி கொஞ்சி கொண்டிருந்தார். சிறிது நேரம் விளையாடி விட்டு வருவதாக கூறினார்.
இந்தநிலையில், திடீரென அவர் குழந்தையுடன் கூட்டத்தில் தலைமறைவாகி விட்டார்.
இளம்பெண் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹபிபுல் மற்றும் நஸ்ரின் இருவரும் அந்த இளம்பெண்ணை தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் மீது ஜே.ஜே. மார்க் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். இதில், அந்த இளம்பெண் குழந்தையை அங்குள்ள மஜித் தெருவுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த குழந்தையையும் மீட்டனர்.
விசாரணையில், அவரது பெயர் நதிஷா(25) என்பது தெரியவந்தது. பைகுல்லாவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருக்கும் அவர், திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் அந்த குழந்தையை கடத்தியதாக கூறினார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story