தெலுங்கானாவில் இருந்து சபரிமலைக்கு நாமக்கல் வழியாக பக்தர்கள் பாத யாத்திரை செல்வது அதிகரிப்பு
தெலுங்கானாவில் இருந்து சபரிமலைக்கு நாமக்கல் வழியாக பக்தர்கள் பாத யாத்திரை செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாமக்கல்,
தமிழகத்தின் பல்வேறு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்று வருவது வழக்கம். பெரும்பாலானோர் வாகனங்களிலும், சிலர் பாத யாத்திரையாகவும் செல்வதை காண முடியும்.
இதற்கிடையே தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய நாமக்கல் வழியாக பக்தர்கள் பாத யாத்திரையாக ஆண்டுதோறும் செல்கின்றனர். அதன்படி இந்த ஆண்டும் ஏராளமானோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து நாமக்கல் வழியாக பாத யாத்திரை சென்றனர்.
இதுகுறித்து நாமக்கல் வழியாக சபரிமலைக்கு பாத யாத்திரை மேற்கொண்ட தெலுங்கானா அய்யப்ப பக்தர் நரேஷ் கூறியதாவது:-
ஆண்டுதோறும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு அதிக அளவிலான அய்யப்ப பக்தர்கள் பாத யாத்திரையாக செல்கிறோம். இந்த ஆண்டு தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் இருந்து குருசாமி கடப்பநாகராஜ் தலைமையில் 80 பேர் கொண்ட குழுவினர் கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி பாத யாத்திரையை தொடங்கினோம். பின்னர் கருனூர், ஆனந்தபூர், பெங்களூரு, ஓசூர் மற்றும் சேலம் வழியாக 34-வது நாளான இன்று (நேற்று) நாமக்கல் வந்துள்ளோம்.
இதையடுத்து கரூர், மதுரை வழியாக நடந்து சென்று கேரள மாநிலம் குமுளி வழியாக சபரிமலைக்கு செல்ல உள்ளோம். டிசம்பர் மாதம் 3-ந்தேதி சபரிமலையில் அய்யப்ப சாமியை தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.
இதேபோல் பல்வேறு குழுவினர் தெலுங்கானாவில் இருந்து பாத யாத்திரையாக தமிழகம் வழியாக சபரி மலைக்கு நடந்து செல்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவிலான பக்தர்கள் பாத யாத்திரை செல்கிறோம். பாத யாத்திரையாக நடந்து சென்று வழிபாடு நடத்துவதால் வாழ்வில் நன்மைகள் அதிகரிப்பதை உணர முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story