வேலூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு 2-வது முறையாக மர்மநபர்கள் கைவரிசை


வேலூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு 2-வது முறையாக மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 26 Nov 2018 4:15 AM IST (Updated: 25 Nov 2018 10:10 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர், 

வேலூரை அடுத்த ஊசூர் ஜமால்புரம் மெயின் ரோடு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடையின் விற்பனை மேற்பார்வையாளராக அண்ணாதுரை என்பவர் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு அண்ணாதுரை, கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தகவல் அறிந்த விற்பனை மேற்பார்வையாளர் அண்ணாதுரை அங்கு வந்து டாஸ்மாக் கடையை திறந்து மதுபாட்டில்களை சரிபார்த்தார். அப்போது பெட்டிகளில் வைத்திருந்த ரூ.20ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதே டாஸ்மாக் கடையில் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிச் சென்றனர். இதையடுத்து திருட்டை தடுக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது.

கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் பாதி முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் 2-வது முறையாக கடையின் சுவரை துளையிட்டு மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் டாஸ்மாக் அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. திருட்டை தடுக்க இப்பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story