நொகனூர் காட்டில் முகாமிட்டிருந்த 40 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
நொகனூர் காட்டில் முகாமிட்டிருந்த 40 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வந்தன. அவை பல குழுக்களாக பிரிந்து அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. ஓசூர் அருகே சானமாவு காட்டில் முகாமிட்டிருந்த 40 யானைகளை வனத்துறையினர் போராடி தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினார்கள்.
அங்கிருந்து பேவநத்தம் வனப்பகுதியையொட்டி உள்ள சூரப்பன் குட்டை வனப்பகுதியில் இந்த யானைகள் முகாமிட்டிருந்தன. அவற்றை வனத்துறையினர் விரட்டினார்கள். யானைகள் திம்மசந்திரம், மாரசந்திரம், லக்கசந்திரம் வழியாக பயிர்களை நாசம் செய்து விட்டு நொகனூர் காட்டிற்கு சென்றன.
அங்கிருந்த யானைகளை விரட்டும் பணி நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. இதையொட்டி வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும், அதிக ஒலி எழுப்பியும் 40 காட்டு யானைகளையும் பல மணி நேரம் போராடி நேற்று காலை ஜவளகிரி வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். முன்னதாக யானைகள் வரும் வழியில் பாலதொட்டனப்பள்ளி, அகலகோட்டை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெல், சோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் ஏற்கனவே ஜவளகிரி காட்டில் 30 காட்டு யானைகள் உள்ளன. தற்போது 40 யானைகளும் அத்துடன் சேர்ந்து கொண்டன. இதனால் மொத்தம் 70 யானைகள் தற்போது அங்கு உள்ளன. அவற்றை கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதிக்கு விரட்டிட வனத்துறை யினர் திட்டமிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story