அடர்ந்த காட்டில் இருந்து வந்தபோது காட்டுப்பன்றி என நினைத்து விவசாயியை சுட்டுவிட்டேன் கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்


அடர்ந்த காட்டில் இருந்து வந்தபோது காட்டுப்பன்றி என நினைத்து விவசாயியை சுட்டுவிட்டேன் கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 25 Nov 2018 11:00 PM GMT (Updated: 25 Nov 2018 6:54 PM GMT)

வேட்டைக்கு சென்றபோது விவசாயி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான நண்பர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், அடர்ந்த காட்டுக்குள் இருந்து இருட்டில் வெளியே வந்த போது காட்டுப்பன்றி என்று நினைத்து நண்பரை சுட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டம் கருமந்துறை கலக்காம்பாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45), விவசாயி. இவருடைய மனைவி சரோஜா. இவர்களுக்கு ராமமூர்த்தி (10), சத்தியமூர்த்தி (7), ஜெயவேல் (3) என 3 மகன்கள் உள்ளனர். கடந்த 23-ந்தேதி இரவு செல்வராஜ் தனது நண்பர்கள் பாண்டியன் (55), பெரியசாமி (52), பூட்டி என்கிற ஆண்டி (50) ஆகியோருடன் கருமந்துறை மலைப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் வன விலங்குகளை வேட்டையாட சென்றனர். அப்போது துப்பாக்கியால் சுடப்பட்டு செல்வராஜ் இறந்தார். நள்ளிரவு நேரத்தில், பெரியசாமி, ஆண்டி ஆகிய 2 பேரும் செல்வராஜ் உடலை எடுத்து வந்து அவரது வீட்டு முன்பு போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து கரியகோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. துணை சூப்பிரண்டு சூரியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் செல்வராஜை துப்பாக்கியால் சுட்டது பாண்டியன் என்று தெரியவந்தது. இதையடுத்து பாண்டியனை போலீசார் கைது செய்தனர். செல்வராஜ் உடலை போலீசுக்கு தெரியாமல் அவருடைய வீட்டு முன்பு கொண்டு வந்து போட்டு விட்டு தப்பி ஓடியதற்காக பெரியசாமி, பூட்டி என்கிற ஆண்டி ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பாண்டியன் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

ஆத்தூர் தாலுகா கருமந்துறை கலக்காம்பாடி பகுதி மோடூர் மலை கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட சம்பவத்தன்று இரவு சென்றோம். அப்போது நாங்கள் 4 பேரும் புதருக்குள் தனித்தனியாக மறைந்து இருந்து கண்காணித்தோம். நாங்கள் இருந்த பகுதி அடர்ந்த காடு என்பதால் போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருந்தது.


வனவிலங்குகள் புதரில் இருந்து வெளியே வருவதை பார்த்தால் பறவைகள் அல்லது விலங்குகள் போல் சத்தம் எழுப்புவோம். அந்த சத்தத்தை வைத்தே யார், யார் எங்கு இருக்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்வோம். நாங்கள் வேட்டையில் ஈடுபட்டபோது செல்வராஜ் புதருக்குள் இருந்து திடீரென வெளியே வந்துள்ளார். அப்போது இலைகள் அசைந்தன. இதை பார்த்த நான் காட்டுப்பன்றி தான் வருகிறது என நினைத்து தவறுதலாக சுட்டு விட்டேன். இதில் அவர் இறந்தார்.

பின்னர் ஊரில் மக்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் செல்வராஜ் உடலை எடுத்துச்சென்று அவருடைய வீட்டின் முன்பு வைத்து விட்டு பெரியசாமி, ஆண்டி ஆகியோர் அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்தனர். இவ்வாறு பாண்டியன் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 3 பேரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story