நீலகிரியில் நள்ளிரவில்: கேரட் அறுவடை செய்வதை தவிர்க்க வேண்டும் - கலெக்டர் அறிவுரை
நீலகிரி மாவட்டத்தில் நள்ளிரவில் கேரட் அறுவடை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ள தாவது:-
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்படும் முக்கிய காய்கறி பயிரான கேரட் 2 ஆயிரத்து 300 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது நள்ளிரவு 2 மணியளவில் கூலி தொழிலாளர்களை கொண்டு கேரட் அறுவடை செய்யப்பட்டு, காலை 6 மணியளவில் மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சமூக பிரச்சினைகள் மற்றும் வனவிலங்குகள் தொழிலாளர்களை தாக்கும் அபாயம் ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு இனிவரும் நாட்களில் நள்ளிரவில் கேரட் அறுவடை செய்வதை தவிர்த்து, காலை 6 மணியளவில் கேரட் அறுவடை செய்து மேட்டுப்பாளையம் சந்தைக்கு காலை 10 மணியளவில் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும். கேரட் கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி காலை 10 மணியளவில் வியாபாரிகள் கேரட் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அனைத்து கேரட் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. இந்த முறையினை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு காய்கறிகள் உற்பத்தியாளர் சங்க தலைவர் ரங்கசாமி கூறியதாவது:-
நீலகிரியில் நள்ளிரவில் கேரட் அறுவடை செய்வதற்கு, மாவட்ட கலெக்டர் எடுத்து உள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது. விவசாய விளைநிலங்களில் காலை 6 மணிக்கு கேரட் அறுவடை செய்யப்படுகிறது. பின்னர் சுத்திகரிப்பு எந்திரத்தில் கேரட் சுத்தம் செய்யப்பட்டு லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் ஊட்டி நகரத்துக்கு கொண்டு வர காலை 10 மணி ஆகிறது. இந்த கேரட்டுகளை லாரி மூலம் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல மதியம் 1 மணி ஆகி விடுகிறது.
இதனால் கேரட்டுகளை ஏலம் எடுக்காத நிலை ஏற்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மேட்டுப்பாளையம் காய்கறி வியாபாரிகள் ஊட்டியில் இருந்து கொண்டு செல்லப்படும் கேரட்டுகளை ஏலம் எடுக்கும் வகையில், நீலகிரி மாவட்ட கலெக்டர், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story