ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் திறப்பு
ராமநாதபுரத்தில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் மணிகண்டன் திறந்து வைத்தார்.
பரமக்குடி,
வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரானது போகலூர் யூனியன் அரசடிவண்டல் கிராமத்தில் உள்ள வலசைப்படுகை அணையை வந்தடைந்தது. இதையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கீழ் நாட்டார்கால்வாய் வழியாக ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு குடிநீர் தேவைக்காகவும், விவசாய பயன்பாட்டிற்காகவும் அமைச்சர் மணிகண்டன் தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:– ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்களின் நன்மைக்காக வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சேர வேண்டிய வைகை ஆறு பூர்வீக ஆயக்கட்ட கணக்கீட்டின்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என முதல்–அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.
இந்த கோரிக்கையை பரிவுடன் ஏற்றுக்கொண்ட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் மாதம் 10–ந்தேதி முதல் 27–ந்தேதி வரை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கான பூர்வீக ஆயக்கட்டு கணக்கீட்டின்படி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார். தண்ணீர் திறந்து விடப்பட்டு பார்த்திபனூர் மதகணை வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தண்ணீர் சேமிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக ஆயக்கட்டு பகுதி விவசாய பயன்பாட்டிற்காக கடந்த 14–ந்தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 17–ந்தேதி பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்துள்ளது. இந்த மதகு அணையின் இடது மற்றும் வலது பிரதான கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 65 கண்மாய்களுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 15 கண்மாய்களுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வைகை தண்ணீரானது தற்போது போகலூர் யூனியன் அரசடிவண்டல் கிராமத்தில் உள்ள வலசைப்படுகை அணையை வந்ததடைந்ததை தொடர்ந்து கீழ்நாட்டார் கால்வாய் வழியாக 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாய பயன்பாட்டிற்காகவும் திறந்து விடப்பட்டுஉள்ளது. இதன்மூலம் கீழ்நாட்டார் கால்வாயில் அமைந்துள்ள 15 கண்மாய்களும், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயும் பயன்பெறும். மேலும் ஆர்.எஸ்.மங்கலம் கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கான நீர்வரத்து கால்வாய் சுமார் 15 கிலோ மீட்டர் நீள அளவில் ரூ.30 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு போர்க்கால அடிப்படையில் வரத்துக்கால்வாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் தங்குதடையின்றி ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.