காவிரி– குண்டாறு –வைகை இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயத்தை பாதுகாக்க காவிரி–குண்டாறு–வைகை ஆறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா சி.கே.மங்கலத்தில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில பொது செயலாளர் வக்கீல் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் மதுரை வீரன், சுப்பிரமணியன், ராமநாதன், கார்மேகம், அரசூர்குமார், வர்த்தக சங்க தலைவர் விஜயகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஒன்றிய பொதுச்செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்புக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கலந்து கொண்டு பேசியதாவது:– நரேந்திரமோடி பிரதமராக வந்தால் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு விலையை இரண்டு மடங்கு உயர்த்தி தருவேன் என்றும், நதிகளை இணைப்பேன் என்றும் தெரிவித்தார். ஆனால் எதையும் செய்யவில்லை. அதனால் தான் விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்தினோம். வட இந்தியாவில் ஒரு லட்சம் டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் 300 டி.எம்.சி. வீணாக கடலில் கலக்கிறது. இதை வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்திற்கு திருப்பி விட்டால் இங்கு விவசாயம் செழிக்கும். இதற்காகத்தான் தொடர்ந்து போராடிவருகிறோம்.
ஆண்டு பட்ஜெட்டில் 3 சதவீதம் மட்டுமே உள்ள அரசு ஊழியர்களுக்கு 90 சதவீதம் சம்பளத்திற்காக ஒதுக்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதனை ஒரு லட்சம் கோடியாக அரசு ஒதுக்கி தரவேண்டும். ரூ.4 லட்சம் கோடி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யும் அரசு, விவசாயம் பாதிக்கப்பட்டபோதும் விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. 60 வயதில் அரசு ஊழியர் பென்சன் குறைந்தபட்சம் ரூ.42,000 பெறுகிறார்.
ஆனால் அதே 60 வயதில் விவசாயிக்கு முதியோர் உதவித்தொகை கூட கிடைப்பதில்லை. எனவே மத்திய–மாநில அரசுகள் 60 வயதான விவசாயிக்கு மாதந்தோறும் மகன்கள் இருந்தாலும், நிலம் இருந்தாலும் ரூ.5 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும். விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு சென்று விட்டால் கார்ப்பரேட் கம்பெனிகள் உள்ளே நுழைந்து மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்து நம் தலைமுறையை அழித்துவிடும். அதனால் தான் விவசாயிகள் ஒன்றிணைந்து நம் தலைமுறையை காப்பாற்ற போராட வேண்டிஉள்ளது.
பிரதமர் மோடி தினமும் அயல்நாடுகளுக்கு சென்று கார்ப்பரேட் கம்பெனிகளை இந்தியாவிற்கு அழைக்கிறார். விவசாய பொருட்களுக்கு லாப விலை வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு லாபம் தரும் விதைகளை தரவேண்டும் எனவும் தான் கேட்கிறோம். விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும், மத்திய அரசு விவசாய பொருட்களுக்கு லாப விலை கொடுக்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி வருகிற 27–ந்தேதி முதல் 30–ந்தேதி வரை விவசாயிகள் டெல்லியில் முற்றுகையிடுகிறோம். விரைவில் காவிரி, குண்டாறு, வைகை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம்.
இதற்கு இந்த பகுதி விவசாயிகள் பெரிய அளவில் ஆதரவு அளிக்க வேண்டும். இதேபோல ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு அடுத்த மாதம்25–ந்தேதிக்கு கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்காவிட்டால் பல லட்சம் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல் படுத்த தென்னைக்கு ரூ.50 ஆயிரம் தருவதுபோல் கஜா புயலால் பாதித்த மாவட்டங்களில் சாய்ந்து போன தென்னை மரங்களுக்கு அதே ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனை தொடர்ந்து கூட்டத்தில் கடந்த 2017–18–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். கிராம பஞ்சாயத்து செயலாளர், கிராம உதவியாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்களை 3 ஆண்டுக்கு ஒருமுறை பணி மாறுதல் செய்ய அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும். பயிர் காப்பீடு செய்ய நோட்டரி பப்ளிக் கையொப்பம் முறையை ஒழிக்க வேண்டும். அஞ்சுகோட்டை கால்வாயில் இருந்து சீர்தாங்கி கண்மாயை இணைக்க வேண்டும்.
வைகை அணையில் இருந்து ஒருபோக சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். தொடக்க வேளாண்மை வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளை அரசும், மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடனே தடுக்க வேண்டும். விவசாய கடன்களையும், உரம் மற்றும் வேளாண் இடுபொருட்களையும் உடனே வழங்க வேண்டும். காவிரி, குண்டாறு, வைகை ஆறு இணைப்பு திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
அதன்பின்னர் விவசாயிகள் பணம் வாங்கி கொண்டு ஓட்டுப்போடமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன், முன்னாள் யூனியன் தலைவர் நல்லசேதுபதி, மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் தீனதயாளன், முன்னாள் யூனியன் துணைத்தலைவர் ராமலிங்கம், வக்கீல்கள் கண்ணன், கார்த்திகேயன், தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.