அமராவதியின் உபரி நீரால் தாராபுரம் பகுதியில் 9 தடுப்பணைகள் நிரம்பியது, விவசாயிகள் மகிழ்ச்சி


அமராவதியின் உபரி நீரால் தாராபுரம் பகுதியில் 9 தடுப்பணைகள் நிரம்பியது, விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 26 Nov 2018 4:00 AM IST (Updated: 26 Nov 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

அமராவதியின் உபரி நீரால் தாராபுரம் பகுதியில் 9 தடுப்பணைகள் நிரம்பியுள்ளது.

தாராபுரம்,

அமராவதி அணைக்கு உட்பட்ட பழைய புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. புதிய ஆயக்கட்டு பாசனத்தில், உபரித் தண்ணீர் சின்னக்கரை ஓடையில் பெருக்கெடுத்து வருவதால், சின்னக்கரை ஓடையின் குறுக்கே உள்ள 9 தடுப்பணைகள் நிரம்பி விட்டது. இதனால் தடுப்பணைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பாசனத்திற்காக உள்ள கிணறுகளுக்கு இனிமேல் தண்ணீர் கிடைத்துவிடும் கிணற்று பாசன விவசாயிகள் குறுகிய கால பயிர்கள் அல்லது காய்கறிகளை சாகுபடி செய்வார்கள். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் சற்று மேம்படும்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:–

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துபோனதால் வறட்சி ஏற்பட்டிருந்தது. கிணற்றுப் பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் பயிர் மற்றும் காய்கறி சாகுபடி செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். சில கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது. கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்கவில்லை. விவசாயிகள் கால்நடைகளை விற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென் மேற்கு பருவமழை ஓரளவு பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பகுதியில் எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. ஆனால் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அணையின் நீர் இருப்பு 86 அடி வரை உயர்ந்தது. அதையடுத்து அமராவதியின் பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் அமராவதி ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளிலும், புதிய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. மற்ற பகுதிகள் அதே வறட்சி காணப்பட்டது. கிணற்று பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லையே என்ற கவலை விவசாயிகள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில் புதிய ஆயக்கட்டு பாசனத்திலிருந்து உபரி தண்ணீர் சின்னக்கரை ஓடைக்கு வரத்தொடங்கியது. இதனால் சின்னக்கரை ஓடையின் குறுக்கே பெரியபுத்தூர், சின்னப்புத்தூர், மாந்தியாபுரம், ரெட்டிபாளையம், பஞ்சப்பட்டி, குருப்பநாய்க்கன்பாளையம், கவுண்டச்சிபுதூர், சகுனிபாளையம், சுண்ணாம்புக்காடு ஆகிய பகுதிகளில் கட்டபட்டுள்ள 9 தடுப்பணைகள் நிரம்பி விட்டது.

தடுப்பணை நிரம்பியதால் அதனைச் சுற்றியுள்ள கிணறுகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. வரும் நாட்களில் கிணற்றுப் பாசனத்தில் விவசாயிகள் தக்காளி, கத்தரி, பச்சைமிளகாய், வெங்காயம், பாகல், பீர்க்கு மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்களை பயிர் செய்வார்கள். இங்கு பயிரிடப்படும் காய்கறிகள் பெரும்பாலும் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

ஒரு சில விவசாயிகள் தாராபுரம் உழவர் சந்தைக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வார்கள். வடகிழக்கு பருவமழை இந்த பகுதியில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் மானாவாரி பயிர் சாகுபடி குறைந்துவிட்டது. கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க, கிணற்று பாசனத்தைக்கொண்டு, தீவனப்பயிர்களை வளர்த்துக் கொள்வார்கள். இந்த தருணத்தில் அமராவதியின் உபரி தண்ணீர் கிடைத்தது இப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story