திருப்பூர் மாவட்டத்தில் மரக்கன்றுகளை வளர்த்து பசுமையான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் - கலெக்டர் பேச்சு
திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவு மரக்கன்றுகளை வளர்த்து பசுமையான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பேசினார்.
திருப்பூர்,
திருப்பூர் மங்கலம் ரோடு ஆண்டிபாளையம் பிரிவில் உள்ள பேரடைஸ் வணிக வளாகத்தில் வனத்துக்குள் திருப்பூர் அலுவலகம் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் கோவை சிறுதுளி அமைப்பு நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் குத்துவிளக்கேற்றினார். கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
திருப்பூர் கடந்த 25 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்து ஒரு தொழில் நகரமாக உருவாகியுள்ளது. இந்த தொழில் நகரத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் கடமையாகும். இளைய தலைமுறையினர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, சுற்றுச்சூழலை மாசடையாமல் பாதுகாக்க வேண்டும்.
நீர்நிலைகள், கண்மாய்கள் மற்றும் பொது இடங்களில் அதிகளவு மரக்கன்றுகளை நட்டு ஒரு பசுமையான சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும். அப்போது தான் நாம் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும். அதிகளவில் மரம் நடுவதால் மழைபெய்து விவசாயத்திற்கு உதவியாக இருக்கும்.
பொதுமக்கள் தன்னலமற்ற சேவையை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களும் மரக்கன்றுகள் நட்டு இயற்கையை பாதுகாக்க முன்வர வேண்டும். குறிப்பாக பாரம்பரிய மரங்களை நட்டு வளர்த்து வந்தால் மண்வளம், காற்று மற்றும் நீர்வளங்களை பாதுகாக்க முடியும். அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளில் அதிகளவு மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் வனத்துக்குள் திருப்பூர் தன்னார்வ தொண்டு நிறுவனம் 6.5 லட்சம் மரக்கன்றுகளை இந்த மாவட்டம் முழுவதும் நட்டு வளர்த்து வருகிறார்கள்.
பொதுமக்கள் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க தங்களுடைய வீட்டில் அல்லது அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பது, விவசாயிகள் நஞ்சில்லாத வேளாண்மையை மேற்கொள்வது மற்றும் தொழிற்சாலைகள் தோறும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் எந்த ஒரு வகையிலும் மாசடையாமல் காப்பது நமது ஒவ்வொருவருடைய கடமையாகும்.
மேலும், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் நெகிழிக்கு மாற்றாக துணிப்பையை அதிகளவில் பயன்படுத்த முன்வந்து ஒட்டுமொத்த சமுதாயத்தை ஒரு சீரான தூய்மையான வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன் பின்னர் வனத்துக்குள் திருப்பூர் வெற்றி அமைப்பின் புதிய இணையதளத்தை மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரனும், இணையதள காணொலியை சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிர்வாக அறங்காவலருமான கார்த்திகேய சிவ சேனாதிபதியும் தொடங்கி வைத்தனர்.
இதில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிதியாதார சேர்க்கை ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி மற்றும் வனத்துக்குள் திருப்பூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கஜா புயல் பாதிப்பால் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.