கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் நிவாரண நிதி - முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு


கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் நிவாரண நிதி - முதல் அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2018 5:15 AM IST (Updated: 26 Nov 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசு நிவாரண நிதி அவரவர் வங்கிக்கணக்கில் இன்று செலுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் காரைக்காலில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சேத பகுதிகளை நானும், அமைச்சர்களும் காரைக்கால் சென்று பார்வையிட்டோம். அதன்பின் அமைச்சரவை கூடி பேரிடர் மீட்புக்குழுவின் விதிமுறைப்படி மாநில அரசு மூலம் நிவாரண உதவி அறிவித்துள்ளோம்.

மீனவர்கள், விவசாய தொழிலாளர்கள், குடிசை வீடுகளின் பாதிப்புகளுக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மழைக்கால நிதியாக ரூ.2,500 வழங்கப்படுகிறது. அத்துடன் மேலும் ரூ.2,500 சேர்த்து அதாவது ரூ.5 ஆயிரமாக வழங்கப்படும்.

படகு, வலை சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இடைக் காலமாக ரூ.64 லட்சம் ஒதுக்கி சிறிய படகுகளுக்கு நிவாரணம் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரண உதவியாக 9,500 விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், முழுமையாக பாதிக்கப்பட்ட 1,500 குடிசைகளுக்கு தலா ரூ.4,500 வழங்கப்படும். இந்த தொகைகளை வழங்க கோப்புகள் தயாரிக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண தொகை நாளை (இன்று) பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். நான் டெல்லி சென்று உள்துறை செயலாளரை சந்தித்து புயல் நிவாரணத்துக்கு ரூ.187 கோடி வழங்குமாறு கேட்டுள்ளேன். நிதி மந்திரி அருண்ஜெட்லியையும் சந்தித்தேன். அவர் இப்போதைக்கு மாநில நிதியைக்கொண்டு இடைக்கால நிவாரணம் வழங்குங்கள். மத்தியக்குழு அறிக்கை அளித்தபின் நிவாரணநிதி வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

காரைக்காலில் புயல் பாதித்த பகுதிகளை மத்தியக்குழு நாளை (இன்று) பார்வையிடுகிறது. ஆய்வினை முடித்து நாளை மறுநாள் (நாளை) புதுவை தலைமை செயலகத்தில் எங்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது முழுமையான நிவாரணத்தொகை வழங்க வலியுறுத்துவோம்.

புயலில் பசுமாடுகள் இறந்துள்ளன. கோழிப்பண்ணை, ஆடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மீனவர்களின் படகுகளும், வலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 4,500 மின்கம்பங்கள் மின் விளக்குகளோடு சேதம் அடைந்துள்ளன. சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறையில் ரூ.95 கோடிக்கும், நகராட்சியில் ரூ.40 கோடி அளவிலும் என ஒட்டுமொத்தமாக ரூ.187 கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story