‘கஜா’ புயல் பாதிப்பு தொடர்பாக மத்தியக்குழுவிடம் சரியான புள்ளி விவரங்களை அளிக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
‘கஜா’ புயல் பாதிப்பு தொடர்பாக மத்தியக்குழுவிடம் சரியான புள்ளி விவரங்களை அளிக்கவேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
காரைக்கால் மாவட்டம் புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் மத்தியக்குழு பார்வையிட வரும் தகவல் கிடைத்து 10 நாட்களுக்கு பிறகு கவர்னர் கிரண்பெடி காரைக்காலை சென்று பார்த்தது நாடகத்தனமான செயல். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் எதுவென்றால் ஆட்சியில் இருப்பவர்களின் ஆறுதலான வார்த்தைகள்தான்.
மனிதாபிமான முறையில் கூட ஆறுதல் கூற விருப்பப்படாத கவர்னர் கிரண்பெடி காரைக்காலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை தவிர்த்து பிரச்சினை இல்லாத இடங்களை தேடிச்சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்தாலோசித்துவிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருப்பது முழுமையான அரசியல் தனத்துக்கு மலிவு விளம்பரத்துக்குத்தான்.
முதல்–அமைச்சர் காரைக்காலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஒரு சில நிவாரணங்களை அறிவித்துள்ளார். அவரால் அறிவிக்கப்பட்ட உதவிகள் போதுமானதல்ல. அங்குள்ள மக்கள் பரிதவித்து வரும் நிலையில் தமிழகம் போன்று நிவாரணங்களை அறிவித்து வழங்கவேண்டும். தற்போது முதல்–அமைச்சர் அறிவித்த நிவாரணங்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
எவ்வளவு படகுகள் சேதமடைந்துள்ளன? அதற்கான நிவாரணம் என்ன? சேத விவரங்கள் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு விட்டதா? கவர்னருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி மனிதாபிமான அடிப்படையில் காரைக்கால் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும்.
குறிப்பாக காரைக்காலில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 30 ஆயிரம் குடும்பங்கள் சிவப்பு ரேசன் அட்டை வைத்துள்ளனர். அந்த குடும்பத்தினருக்காவது தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கிட வேண்டும். காரைக்காலுக்கு வரும் மத்தியக்குழுவிடம் கோஷ்டி பூசலை மறந்து கவர்னரும், முதல்–அமைச்சரும் சரியான புள்ளி விவரங்களை அளிக்கவேண்டும்.
சபரிமலை விவகாரம் தொடர்பாக பாரதீய ஜனதா சார்பில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுத்தோம். முதல்–அமைச்சரும் மற்றும் சிலரும் பாரதீய ஜனதா மட்டும்தான் மக்கள் விரோத செயலில் ஈடுபடுவதுபோன்று செயல்படுகிறார்கள்.
புதுவை மாநிலத்துக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில்கூட ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளார். குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 2 முழுஅடைப்பு போராட்டம் நடத்தியது போன்றவற்றை கூறலாம்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.