கம்பம் அருகே: குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


கம்பம் அருகே: குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Nov 2018 3:45 AM IST (Updated: 26 Nov 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகேயுள்ள நாராயணத்தேவன்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கம்பம், 

கம்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றில் உறை கிணறு அமைத்து குழாய் முலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள சர்ச் தெரு பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து ஊராட்சி எழுத்தரிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நாராயணத்தேவன்பட்டியில் உள்ள உத்தமபாளையம்-சுருளிஅருவி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ராயப்பன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், பாஸ்கரன் (கிராம ஊராட்சி) ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story