கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு அரசு, ரூ.3 லட்சத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும் வைகோ பேட்டி


கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு அரசு, ரூ.3 லட்சத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 25 Nov 2018 10:45 PM GMT (Updated: 25 Nov 2018 8:05 PM GMT)

கஜா புயல் தாக்கியதில் வீடு இழந்தவர்களுக்கு அரசு, ரூ.3 லட்சத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று வைகோ கூறினார்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலையில் புதுக்கோட்டைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கஜா புயலால் இறந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயத்தை பற்றி தமிழக முதல்-அமைச்சருக்கு ஒன்று தெரியாது. எட்டு வழிச்சாலைக்கு ரூ.50 ஆயிரம் அறிவித்து விட்டு, புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு ரூ.1100 அறிவித்தால் நியாயமா?. ஒரு ஏக்கர் வாழை மரத்திற்கு ரூ.45 ஆயிரம் கொடுக்க வேண்டும் தென்னை மரத்திற்கு ரூ.50 ஆயிரமும், மரத்தை அகற்ற ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும். ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். புயலில் வீடு இழந்தவர்களுக்கு அரசு ரூ.3 லட்சத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். தேக்கு மரத்திற்கு ரூ.75 ஆயிரம் கொடுக்க வேண்டும். மீட்பு பணியில் உயிரை கொடுத்து பணியாற்றி கொண்டிருக்கும் மின்சார ஊழியர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கும் நான் தலை வணங்குகிறேன்.


புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நாங்கள் தனி அறிக்கையை தயாரித்து வருகின்றோம். நான் யாரையும் குறை சொல்லவும், விமர்சனம் செய்யவும் வரவில்லை. தமிழகத்திற்கு புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால் பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்திற்குள் எந்த பகுதிக்கு பிரதமர் மோடி வந்தாலும் நாங்கள் கருப்பு கொடி காட்டுவோம். தற்போது புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இருக்கும் மத்திய குழு ஒரு அயோக்கிய குழு. தமிழக அரசிற்கு முதுகெலும்பு போய் 2 ஆண்டுகள் ஆகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பெருங்களூர், ஆதனக்கோட்டை, சொக்கநாதப்பட்டி, சோத்துபாளை, வளவம்பட்டி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கந்தர்வகோட்டையில் திறந்த வேனில் நின்று கொண்டு பேசுகையில், இந்தியாவில் தமிழ்நாடு என்ற மாநிலம் இருப்பது பிரதமர் மோடிக்கு தெரியுமா?. தொடர்ந்து தமிழ்நாட்டை பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார். மாநில அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story