மதுகுடிக்க மனைவி பணம் தராததால்: பீரோவை தள்ளி விட்டு குழந்தையை கொன்ற தந்தை கைது


மதுகுடிக்க மனைவி பணம் தராததால்: பீரோவை தள்ளி விட்டு குழந்தையை கொன்ற தந்தை கைது
x
தினத்தந்தி 26 Nov 2018 3:30 AM IST (Updated: 26 Nov 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே மதுகுடிக்க மனைவி பணம் தராததால், ஆத்திரத்தில் பீரோவை தள்ளி விட்டு குழந்தையை கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம், 

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் அண்டகத்துறை கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன் ரமேஷ்(வயது 33). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி மைதிலி(30). இவர்களுக்கு புவனேஸ்வரி(3) என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரமேஷ், மனைவி மைதிலியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் வீட்டில் உள்ளே பீரோவை தள்ளி விட்டு விடுவேன் என்று ரமேஷ் மிரட்டியுள்ளார். அப்போதும் தன்னிடம் பணம் இல்லை என்று மைதிலி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், பீரோவை கீழே தள்ளி விட்டுள்ளார். அப்போது கீழே படுத்திருந்த குழந்தை புவனேஸ்வரி மீது பீரோ விழுந்தது. இதனால் பதறிப்போன மைதிலி, பீரோவை தூக்கி கீழே கிடந்த குழந்தையை தூக்கிக்கொண்டு கரியாப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரியாப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தார்.

மதுகுடிக்க மனைவி பணம் தராத ஆத்திரத்தில் பீரோவை தள்ளி விட்டு குழந்தையை தந்தை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story