இந்தியாவிலேயே தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் - அமைச்சர் சம்பத் பேச்சு
இந்தியாவிலேயே தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று அமைச்சர் சம்பத் பேசினார்.
மதுரை,
தமிழக அரசின் சார்பில், வருகிற ஜனவரி மாதம் 23 மற்றும் 24–ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுடன் இணைந்து, இந்திய தொழில் கூட்டமைப்பினர் நடத்தும் முதலீட்டாளர்களுக்கான தொழில் கருத்தரங்கு திருச்சி மற்றும் கோவையில் நடத்தப்பட்டது. 3–வது நகரமாக மதுரையில் இந்த கருத்தரங்கு நேற்று நடந்தது. தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
சிறந்த கட்டமைப்பை உருவாக்கி, தனிநபர் வருவாயை அதிகப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை அடைவது தான் தமிழக அரசின் கொள்கை. இந்த கொள்கையுடன் செயல்படுவதால், இந்தியாவிலேயே தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும், தொழில் முதலீட்டை ஈர்ப்பதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் உள்கட்டமைப்பு, மருத்துவ வசதி, திறமையான பணியாளர்கள், அரசின் செயல்திறன், சட்டம்–ஒழுங்கு ஆகியவை மிகச்சிறப்பாக உள்ளது. சுற்றுச்சூழலிலும், சுற்றுலாத்துறையிலும் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதுதவிர தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் உள்பட பல்வேறு துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 3 ஆயிரம் வெளிநாட்டு தொழிற்சாலைகள் தமிழகத்தில் உள்ளன. அதில் 61 நிறுவனங்கள் பார்ச்சூன் பட்டியலில் இடம் பிடித்தவை. உலக அளவில் கார் தயாரிப்பில் தமிழகம் 10–வது இடத்திற்குள் உள்ளது. சென்னை–மதுரை, மதுரை–தூத்துக்குடி ஆகியவற்றை தொழிற்சாலை வழித்தடமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக மதுரை–தூத்துக்குடி இடையே தேவைப்படும் 19 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு மிக முக்கியம் நிலம் மற்றும் மின்சாரம். அதில் தென்தமிழகத்தில் தான் நிலம் விலை மிகக்குறைவாக உள்ளது. மின்சாரம் தடையின்றி கிடைக்கிறது. எனவே அனைவரும் மதுரையில் முதலீடு செய்வதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் தமிழக தலைவர் எம்.பொன்னுசாமி கூறும்போது, தமிழக தொழில் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தொழில் செய்வதற்கு விண்ணப்பம் செய்து பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை எல்லாம் மலையேறி போய் விட்டது. ஆன்லைனில் விண்ணப்பம் செய்தால் உடனடி அனுமதி கிடைக்கிறது. பல தொழிற்சாலைகளில் நீண்டகாலமாக இருந்து வந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. தொழிற்சாலை மனை அங்கீகாரம், கட்டிட அனுமதி, மின்சார வசதி போன்றவற்றிற்கு உடனடியாக தீர்வு கிடைத்து வருகிறது. அரசின் இந்த செயல்பட்டால், ஏற்கனவே தமிழகத்தில் தொழில் செய்து வருபவர்கள் கூடுதல் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர் என்றார்.