திருவாரூரில், புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணியில் ஈடுபட்டு இருந்த வேன் டிரைவர் சாவு - அமைச்சர்கள் அஞ்சலி
திருவாரூரில், புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணியில் ஈடுபட்டு இருந்த வேன் டிரைவர் மாரடைப்பால் இறந்தார். அவரது உடலுக்கு அமைச்சர்கள் காமராஜ், சரோஜா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
திருவாரூர்,
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த மலைக்கோவிலை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 56). இவர் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
புயலால் பாதிக்கப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை எடுத்து செல்லும் பணியில் கடந்த 5 நாட்களாக ஈடுபட்டு இருந்தார்.
நேற்று மதியம் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த நிவாரண பொருட்களை, நிவாரண முகாம்களுக்கு எடுத்து செல்வதற்காக நாகராஜன் வேனில் ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அவரை உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர்கள் காமராஜ், சரோஜா ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த நாகராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
புயல் நிவாரண பணிகளில் ஈடுபட வந்தவர் நெஞ்சுவலியால் இறந்த சம்பவம் அங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத் தியது.
Related Tags :
Next Story