கஜா புயலால் பாதித்த மக்களுக்கு ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பினர் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு


கஜா புயலால் பாதித்த மக்களுக்கு ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பினர் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு
x
தினத்தந்தி 26 Nov 2018 4:00 AM IST (Updated: 26 Nov 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதித்த மக்களுக்கு ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பினர் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் தியாகராஜன் கூறினார்.

சேலம், 

சேலம் மாவட்ட ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நேற்று சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 165 சங்கங்கள் ஒன்றிணைந்த ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் வருகிற 4-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் கஜா புயல் காரணமாக தள்ளிவைக்கப்படுமா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜாக்டோ, ஜியோ சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் புயலால் பாதித்த மக்களுக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்க எங்கள் அமைப்பு சார்பில் முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பான ஆணையை அரசு வெளியிட வேண்டும். எங்களிடம் ஓய்வூதியத்திற்காக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.13 ஆயிரம் கோடியும், அரசு செலுத்த வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடியும் என ரூ.26 ஆயிரம் கோடி என்ன ஆனது என்றே தெரியவில்லை.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு இந்த ரூ.26 ஆயிரம் கோடியையும் கஜா புயல் நிவாரண நிதிக்காக அரசு பயன்படுத்தலாம். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அரசை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன், பாரி, முருகபெருமாள், உதயகுமார், முத்துகுமரன், சந்திரசேகர், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story