கஜா புயலால் பாதித்த பகுதிகளில் இருந்து வாங்கி வந்து வாழைத்தார்களை விற்று விவசாயிகளுக்கு நிதி உதவி - உண்டியலில் சேமித்த பணத்தை சிறுமி வழங்கினார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வாழைத்தார்களை கோவைக்கு கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்று அந்த நிதி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் உண்டியலில் சேமித்த பணத்தை ஒரு சிறுமி நிவாரண உதவியாக வழங்கினார்.
கோவை,
கஜா புயலால் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் தென்னை, வாழை மரங்கள் லட்சக்கணக்கில் சேதமடைந்தது. இந்த நிலையில் அதில் உள்ள தேங்காய், வாழைதார்கள் போன்றவை அப்படியே கிடப்பதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில கஜா புயலால் திருச்சி அருகே லால்குடி கிராமத்தில் சாய்ந்த வாழைகளில் இருந்து எடுக்கப்பட்ட வாழைதார்களை கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை விவசாயிகள் எடுத்து வந்து விற்பனை செய்கிறார்கள்.
லால்குடி பகுதியில் இருந்து முதல்கட்டமாக 600 வாழைதார்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டு தலா ரூ.150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 450 ரூபாய் மதிப்புடைய வாழைதார்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதில் கிடைக்கும் முழு தொகையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கே வழங்கப்பட இருப்பதாகவும் சிங்காநல்லூர் உழவர்சந்தை விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுரேஷ் தெரிவித்தார்.
பூவன்பழம் வாழைதார்கள் மட்டும் கோவை கொண்டு வரப்பட்டு நேற்று விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து தொழில் முனைவோர் கோபால கிருஷ்ணன் கூறும்போது, வரும் நாட்களில் கூடுதலாக லாரிகளில் வாழைதார்களை கொண்டு வந்து விற்பனை செய்யப்பட உள்ளது. தொழில் நிறுவனங்களுடன் இணைந்து வாழைதார்களை வாங்கி தொழிலாளர்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. விவசாயிகளுடன் இணைந்து வாழைதார்களை விற்பனை செய்யும் முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது, என்றார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் விவசாய பணிகளில் ஈடுபட நம்பிக்கையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை விவசாயிகளும், குறுந்தொழில் முனைவோரும் இணைந்து களமிறங்கி உள்ளதை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர் வெங்கட்ராமன் கோவையில் உள்ள தனது நண்பர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். இதற்காக அவர் கடந்த 2 நாட்களாக கோவையில் தங்கி பல்வேறு அமைப்பினர், பொதுமக்களை சந்தித்து நிவாரண பொருட்களை சேகரித்தார்.
இது குறித்து தகவல் அறிந்த துடியலூர் ஜி.என்.மில் பகுதியில் வசிக்கும் வக்கீல் சிவக்குமார் என்பவரின் மகள் தமிழினி (வயது 6) தான் சிறு வயது முதல் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை ஆசிரியர் வெங்கட்ராமனிடம் வழங்கினார். இதுகுறித்து மாணவி தமிழினி கூறியதாவது:-
எனது பிறந்த நாளுக்கு கிடைத்த பணம் மற்றும் தந்தை, உறவினர்கள் வழங்கிய பணத்தை சிறு வயது முதல் ஒரு உண்டியலில் சேமித்து வந்தேன். தற்போது கஜா புயல் பாதிப்புகள் குறித்து தொலைக்காட்சிகளில் பார்த்தேன். எனவே பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உதவ நான் சேமித்து வந்த பணத்தை வழங்க முடிவு செய்தேன்.
இந்த பணத்தில் இருந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொள்ளும் வகையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு பள்ளி ஆசிரியரிடம் 12 ஆயிரத்து 404 ரூபாயை வழங்கினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story