‘இதற்கு மேலும் எங்களுக்கு ஒரு துயரம் வேண்டுமா’ - 11 நாட்களாக நிவாரண முகாமில் அல்லல்படும் டெல்டா மக்கள்


‘இதற்கு மேலும் எங்களுக்கு ஒரு துயரம் வேண்டுமா’ - 11 நாட்களாக நிவாரண முகாமில் அல்லல்படும் டெல்டா மக்கள்
x
தினத்தந்தி 26 Nov 2018 4:15 AM IST (Updated: 26 Nov 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

11 நாட்களாக நிவாரண முகாமில் அல்லல்பட்டு வரும் டெல்டா மக்கள், வீட்டுக்கு திரும்பும் நாளுக்காக காத்திருக்கிறார்கள்.

தஞ்சாவூர்,

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் 11 நாட்களாக அல்லல்படும் மக்கள் வீட்டுக்கு திரும்பும் நாளுக்காக காத்திருக்கிறார்கள். ‘இதற்குமேலும் எங்களுக்கு ஒரு துயரம் வேண்டுமா’ என பாதிக்கப்பட்ட மக்கள் கேட்பது அங்கு செல்பவர்களின் காதுகளில் ஒலித்த வண்ணம் உள்ளது.

‘கஜா’ புயலின் தாக்கத்தை நேரில் பார்க்கும்போது, “இதற்கு மேலும் எங்களுக்கு ஒரு துயரம் வேண்டுமா?” என மக்கள் கேட்பதுதான் நமது காதுகளில் ஒலித்த வண்ணம் உள்ளது. கடந்த 15-ந் தேதி நள்ளிரவு ருத்ர தாண்டவத்தை ஆட தொடங்கிய கஜா புயல் பல மணி நேரம் சுழன்று, சுழன்று அடித்ததில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் உள்நாட்டு அகதிகளாகி விட்டனர்.

வீடுகளை இழந்தவர்கள், வீடுகளின் மேற்கூரைகளை இழந்தவர்கள், வாழை தோட்டத்தை தொலைத்தவர்கள், தென்னந்தோப்புகளை பறிகொடுத்தவர்கள், உறவுகளை பலி கொடுத்தவர்கள், படகுகளை இரையாக்கியவர்கள் என பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எத்தனை நிவாரண முகாம்களை அமைத்தாலும், எத்தனை டன் உணவு சமைத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதவில்லை எனும்போது கஜா புயலின் தீவிரம் என்ன? என்பதை அறிய முடிகிறது.

பாதிப்பு பலமாக இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்த அரசு டெல்டா மாவட்ட பகுதிகளில் நிவாரண முகாம்களை அமைத்து பல ஆயிரக்கணக்கானோரை 15-ந் தேதி இரவே தங்க வைத்தது. எந்த நேரத்தில் நிவாரண முகாம்களுக்கு அவர்கள் சென்றனரோ தெரியவில்லை. 11 நாட்களாகியும் அவர்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை. நிவாரண முகாமில் இருந்த நேரத்தில் வீட்டின் கூரைகள் புயல் காற்றில் பறந்ததை பரிதவித்தபடி பார்த்தவர்கள் ஏராளம். அவர்களுடைய பரிதவிப்பு இன்றளவும் நீடிக்கிறது. இனி அவர்கள் குடியிருப்பதற்கு இடமில்லாதவர்களாகி விட்டனர்.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை(உலகத்தை) அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகளை படிக்கும்போது உணர்ச்சி பொங்குவது இயல்பு. அப்படி பார்த்தால் இங்கு எத்தனை உலகத்தை அழிக்க வேண்டியது இருக்கும்? என்பது தெரியவில்லை. வீடு, வாசலை இழந்த டெல்டா மக்கள் கையில் தட்டுகளுடன் உணவுக்காக மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கிறார்கள். உணவு தீரும்போது வெறும் தட்டுடனும், கலங்கிய கண்களுடனும் கன்னத்தில் கைவைத்தபடி சோகமே உருவாக திரும்புகிறார்கள். இது தான் ‘கஜா’ புயல் நிவாரண முகாம்களின் இன்றைய நிலைமை.

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதில் இருந்தே மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. புயலுக்கு பின்னர் படகுகள் சேதமடைந்து கிடப்பதால் இனிமேலும் கடலுக்கு செல்ல முடியுமா? என மீனவர்கள் கேள்வி கேட்கிறார்கள். டெல்டாவின் மீன்பிடி தொழிலை அடியோடு முடக்கி போட்டு உள்ளது புயல்.

ஒவ்வொரு மீனவரும் லட்சக்கணக்கில் செலவு செய்தால் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு சென்று மீண்டும் மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியும். கையில் இருந்த பணம் முழுவதையும் புயல் முற்றிலுமாக கரைத்து சென்று விட்டதால் மீனவர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். தென்னை, நெல், மா, பலா, வாழை, வெற்றிலை, கரும்பு, சவுக்கு, நெல்லி, பூக்கள், காய்கறிகள் பயிரிட்டிருந்த விவசாயிகளும் தங்கள் பயிர்களை இழந்து கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனால் விவசாய தொழிலும் முடங்கிப்போய் உள்ளது.

வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாம்களை விட்டால் வேறு எங்கு செல்வது? என திக்குமுக்காடி கிடக்கிறார்கள். கிடைக்கும் உணவை சாப்பிட்டு, கிடைக்கும் பொருட்களுடன் ஒவ்வொரு நாளையும் யுகம் போல கடத்தி வருகிறார்கள். புயலில் சிதைந்து கிடக்கும் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், துணை மின்நிலையங்களை சீரமைக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் நகர பகுதிகளுக்கும், பேரூராட்சி பகுதிகளில் சில இடங்களுக்கும் மட்டுமே மின்சார வினியோகம் கிடைத்துள்ளது. பெரும்பாலான இடங்களில் மின்சாரம், குடிநீர் இல்லாமல் நேற்று 11-வது நாளாக மக்கள் அவதிப்பட்டனர். இரவில் விளக்கேற்றுவதற்கு மண்எண்ணெய் கூட கிடைப்பதில்லை என்பது கிராம மக்களின் விரக்தி ஆகும். மெழுகுவர்த்தி தட்டுப்பாடும் மக்களை பாடாய்படுத்துகிறது.

நிவாரண பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை கண்டால் ஓட்டம் பிடித்து, பொருட்களை வாங்க முண்டியடிப்பதும், நிவாரண பொருட்கள் கிடைக்காவிட்டால் ஏக்கத்துடன் நிற்பதுமாக காவிரி கரையோர பகுதி கண்ணீர் கரையோர பகுதியாக மாறி விட்டது.

கன மழையால் நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டாலும் நம்பிக்கையை மட்டும் கைவிடாமல் தன்னார்வலர்களும், அரசு ஊழியர்களும், பொதுமக்களும் இணைந்து இயல்பு நிலைமையை திரும்ப வைத்து விடுவதற்கு நாள்தோறும் போராடுகிறார்கள். இவர்களின் போராட்டம் விரைவில் வெற்றி பெறும் என்பதே அனைவரின் நம்பிக்கை.



Next Story