நீர்வரத்து சீரானது: சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையனர் அனுமதி அளித்துள்ளனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியதாகவும், புண்ணியஸ்தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது சுருளிஅருவி. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் அடர்ந்த வனப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளுடன் கலந்து தண்ணீர் அருவியாக கொட்டும். இதில் குளித்தால் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
இதனால் சுருளி அருவிக்கு தினந்தோறும் தேனி மட்டுமல்லாது திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஹைவேவிஸ் மலைப்பகுதி மற்றும் சுருளி வன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருவி பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்கும் இடங்களில் இருந்த தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்துவிட்டது. இதனால் ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குளிக்கும் இடத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது.
இந்தநிலையில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் மழை பெய்ததால் கடந்த 22-ந்தேதி சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
தற்போது சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர். எனவே சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் போட்டனர். மேலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானவர்களும் நேற்று சுருளி அருவியில் நீராடினார்கள்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளன. அவை இன்னும் சீரமைக்கப்படவில்லை. அருவியில் இருந்து குழாய் மூலம் நுழைவு பகுதியில் அமைந்துள்ள தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தண்ணீரை சுற்றுலா பயணிகள் சமையல் செய்வதற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி வந்தனர். தண்ணீர் கொண்டு செல்லும் இந்த குழாய்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்து விட்டது. இதனால் தண்ணீர் தொட்டியில் குடிநீர் ஏற்ற முடியவில்லை. தற்போது ஆற்றில் இறங்கி தண்ணீர் பிடித்து செல்கின்றனர். எனவே அருவி பகுதியில் வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளை பராமரிக்க வேண்டும். மேலும் அருவி பகுதியில் பாதுகாப்பு பணிக்கு ஒரு போலீசார் கூட இல்லை. இதனால் பெண்கள் அச்சத்துடன் குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அருவி பகுதியில் நிரந்தரமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story