கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு - வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக தென்னை விவசாயிகள் கதறல்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு - வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக தென்னை விவசாயிகள் கதறல்
x
தினத்தந்தி 26 Nov 2018 5:00 AM IST (Updated: 26 Nov 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது தென்னை விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்பதாக கண்ணீர் விட்டு குழுவினரிடம் கதறி அழுதனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில், டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் கோர தாண்டவமாடியது. இதனால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பேரழிவை சந்தித்து உள்ளன. இந்த மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டிப்போட்டு விட்டது.

புயலின் தாக்குதலால் லட்சக்கணக்கான குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. லட்சகணக்கான தென்னை மரங்கள், பழமைவாய்ந்த மா, பலா, தேக்கு மரங்கள், புளிய மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்து விட்டன.

இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் சேத பகுதிகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் புதுடெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.

அப்போது கஜா புயலால் தமிழகம் கடுமையான பேரழிவை சந்தித்து உள்ளதாகவும், புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும், தற்காலிக சீரமைப்புக்காக உடனடியாக ரூ.1500 கோடி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் தமிழகத்தில் மத்திய குழுவை அனுப்பி பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து பிரதமர் மோடி 7 பேர் கொண்ட மத்திய குழுவை அனுப்ப உத்தரவிட்டார்.

அதன்படி மத்திய உள்துறை இணை செயலாளர் (நீதித்துறை) டேனியல் ரிச்சர்டு, மத்திய நிதித்துறை ஆலோசகர்(செலவினங்கள்) கவுல், மத்திய வேளாண்மைத்துறையின் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் இயக்குனர் ஸ்ரீவஸ்தவா, மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித் துறையின் முதன்மை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர்வள ஆதார துறை இயக்குனர் ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் இளவரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் தமிழகம் வந்தனர்.

இவர்கள் சென்னையில் முதல்-அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். அங்கு ஆய்வை முடித்துக்கொண்டு தஞ்சை வந்த மத்திய குழுவினர் நேற்று 2-வது நாளாக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

முதலில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு புதூர் கிராமத்தில் கஜா புயலால் சேதம் அடைந்த ஆறுமுகம் மற்றும் ஞானமணி ஆகியோரின் இடிந்த வீடுகளை பார்வையிட்டு சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் அப்பகுதி மக்களிடம் கால்நடைகள் சேதம் மற்றும் நெற்பயிர்களின் சேத விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்கள்.

அதைத்தொடர்ந்து புலவன்காடு கிராமத்தில் விவசாயி நாகராஜன் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கஜா புயலால் முற்றிலும் அழிந்துபோன தென்னந்தோப்பினை பார்வையிட்டனர். பின்னர் சேதம் அடைந்த, ஒரத்தநாடு அருகே உள்ள நெம்மேலி திப்பியக்குடி கிராமத்தில் துணை மின்நிலையங்கள் வழியாக 175 கிராமங்கள் பயனடையும் பிரதான துணை மின் நிலையத்தை பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில், 282 எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி சேதமடைந்துள்ளதையும், அப்பகுதியில் கடந்த 45 ஆண்டுகளாக தென்னை பயிர் சாகுபடி செய்து வரும் மன்சூர், அப்துல் கபூர் ஆகியோருக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்த தென்னை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதையும் பார்வையிட்ட மத்திய குழுவினர், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்த பணப்பயிர்களின் சேதம் குறித்து கேட்டறிந்தனர். சென்ற இடங்களில் எல்லாம் தென்னை விவசாயிகள், புயலுக்கு தங்களது வாழ்வாதாரமாக திகழ்ந்த தென்னை மரங்களை இழந்து நிர்க்கதியாக நிற்பதாக கண்ணீர் விட்டு கதறினர்.

அதனைத்தொடர்ந்து மல்லிப்பட்டினம் கடலோர கிராமத்தில் மீன்பிடி துறைமுகம், மீனவர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய குழுவினர், சேதம் குறித்து அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். மேலும் 246 விசை படகுகள், 832 எஞ்சின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள், 147 கட்டுமர படகுகள், 1,428 மீன்பிடி வலைகள், 1440 என்ஜின்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதை மத்திய குழுவினர் பார்வையிட்டு அவற்றின் சேத விவரம் குறித்து மீன்வளத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்்.

அதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுவதற்காக புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக தஞ்சை தனியார் விடுதியில் தங்கியிருந்த மத்திய குழுவினருக்கு கலெக்டர் அண்ணாதுரை, புயலால் சேதம் அடைந்த வீடு, பயிர்கள், தென்னை மரங்கள், மின்மாற்றிகள், கால்நடைகள் குறித்த புகைப்பட விளக்க காட்சி மற்றும் புயல் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை விளக்கி கூறினார்.

லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சேதம்; மத்திய குழுவினர் கருத்து

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் ஆய்வை முடித்துக்கொண்டு திருவாரூர் புறப்பட்ட மத்திய குழுவை சேர்ந்த மத்திய உள்துறை இணை செயலாளர்(நீதித்துறை ) டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாங்கள் பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட்டுள்ளோம். லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரணங்களை மத்திய அரசு வழங்குவதற்காகத்தான் எங்களை மதிப்பீடு செய்ய அனுப்பி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய குழுவினரிடம், பெண்கள் கண்ணீர்; காலில் விழுந்தும் கதறல்

தஞ்சையில், புயல் சேதங்களை பார்வையிட்ட மத்திய குழுவினரிடம் பெண்கள் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர். காலில் விழுந்தும் கதறினர்.

தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு புதூர் பகுதியில் சேதம் அடைந்த ஆறுமுகம் என்பவரின் வீட்டை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அப்போது ஆறுமுகத்தின் மகள் பிரபா, நான் திருமணம் ஆகி வடக்குத்தெருவில் வசித்து வருகிறேன். எனது வீடும் சேதம் அடைந்து விட்டது. எனது தந்தை மட்டும் இங்கு தனியாக வசித்து வந்தார். புயலுக்கு வீடு முற்றிலும் சேதம் அடைந்ததால் அவர் படுக்ககூட இடம் இல்லாமல் நிர்க்கதியாக உள்ளார் என கண்ணீருடன் கூறினார். அப்போது அவர் வேதனை தாங்காமல் கதறி அழுதார்.

இதேபோல் இந்திராகாந்தி என்ற பெண், புயலுக்கு எனது குடிசை வீடு, மாட்டுக்கொட்டகை அனைத்தும் சேதம் அடைந்து விட்டது. தென்னை மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து விட்டன. அதிகாரிகள் இதுவரை கணக்கெடுக்க வரவில்லை. எனவே உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் கூறினார்.

அதன் பின்னர் மத்திய குழு புலவன்காடு பகுதியில் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை பார்வையிட்ட போது திடீரென சரோஜா என்ற பெண் மத்திய குழுவினரின் காலில் விழுந்து, எங்களுக்கு சொந்தமான அனைத்து தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து விட்டன. இதனால் எனது வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நாங்கள் மீண்டு வர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி கதறி அழுதார்.

மத்திய குழுவினரை சந்திக்க விடாமல் தடுத்ததாக பெண்கள் புகார்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு புதூர் பகுதியில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது குழுவினரிடம் புகார்களை தெரிவிப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு இருந்தனர். அவர்களை சுற்றி போலீசாரும் நின்று கொண்டு இருந்தனர். அப்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டு 10 நாட்கள் ஆகியும் இதுவரை அதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் வந்து எங்களை பார்க்கவில்லை. எந்த உதவியும் செய்யவில்லை. உணவு கூட கிடைக்காமல் நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம். கூடுதல் மண்எண்ணெய் வழங்குவதாக கூறினார்கள். ஆனால் தற்போது அடுத்த மாதத்துக்குரிய மண்எண்ணெய்யை வழங்குவதாக கூறுகிறார்கள். மேலும் மின் இணைப்பை சரி செய்வதற்கு மின் ஊழியர்கள் பணம் கேட்கிறார்கள். நோய் ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் கூட பணம் கேட்கிறார்கள். கடந்த 5 நாட்களாக எங்களுக்கு குடிநீர் கூட கிடைக்கவில்லை என்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ராதா, ஜெயசுதா, வான்மதி ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மத்திய குழுவினர் அந்த பகுதிக்கு வந்ததும் அவர்களை சந்திக்க அந்த பெண்கள் முற்பட்டனர். ஆனால் அவர்களால் சந்திக்க முடியவில்லை. தங்களை போலீசார் தடுத்து விட்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். முன்னதாக அவர்களை கலெக்டர் அண்ணாதுரை சந்தித்து பேசினார். அப்போது அவர், உங்களின் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் பெண்கள், அவரிடமும் பாதிக்கப்பட்டு எங்கள் பகுதிக்கு இதுவரை வராதது ஏன்? சாலை ஓரங்களில் மட்டும் செல்கிறீர்கள். கிராமங்களுக்குள் வருவதில்லை என சரமாரியாக கேள்விகளை கேட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story