அம்பரீசின் மரணத்தால் மனம் உடைந்தார்: ரெயில் முன்பாய்ந்து ரசிகர் தற்கொலை மத்தூர் அருகே சோகம்


அம்பரீசின் மரணத்தால் மனம் உடைந்தார்: ரெயில் முன்பாய்ந்து ரசிகர் தற்கொலை மத்தூர் அருகே சோகம்
x
தினத்தந்தி 26 Nov 2018 4:15 AM IST (Updated: 26 Nov 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

அம்பரீசின் மரணத்தால் மனம் உடைந்து காணப்பட்ட அவரது ரசிகர் ஒருவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்தூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு, 

அம்பரீசின் மரணத்தால் மனம் உடைந்து காணப்பட்ட அவரது ரசிகர் ஒருவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்தூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பரீசுக்கு அஞ்சலி

பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மந்திரியுமான அம்பரீஷ் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவர் இறந்த தகவல் அறிந்ததும் ரசிகர்களும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்த நிலையில் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கொட்டேகவுடனதொட்டி கிராமத்தில் அம்பரீசின் உருவப்படத்திற்கு பொதுமக்களும், ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ரெயில் முன்பாய்ந்து தற்கொலை

இதில் நடிகர் அம்பரீசின் தீவிர ரசிகரான தம்மய்யா (வயது 52) என்பவரும் கலந்து கொண்டார். நடிகர் அம்பரீஷ் இறந்த தகவல் அறிந்ததும் அவர் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். அம்பரீசுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் போது அவர் அம்பரீசின் உருவப்படத்தை பார்த்து கதறி அழுதார். அவரை அப்பகுதி மக்கள் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர் வீட்டிற்கு செல்லாமல் அங்கிருந்து நேராக அப்பகுதியில் செல்லும் ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்றார். அப்போது அந்த வழியாக மைசூருவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து அவர்தற்கொலை செய்து கொண்டார்.

சோகம்

இதுபற்றி அறிந்த மண்டியா ரெயில்வே போலீசார் அங்கு சென்று தம்மய்யாவின் உடலை மீட்டு விசாரித்தனர். அப்போது அம்பரீசின் மரணத்தால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மண்டியா ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story