உப்பள்ளி அருகே கிராம பஞ்சாயத்து தலைவர் அரிவாளால் வெட்டி படுகொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
உப்பள்ளி அருகே, சப்பி கிராம பஞ்சாயத்து தலைவர் பசவராஜ் கடப்பட்டியை அரிவாளால் வெட்டிக்கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
உப்பள்ளி,
உப்பள்ளி அருகே, சப்பி கிராம பஞ்சாயத்து தலைவர் பசவராஜ் கடப்பட்டியை அரிவாளால் வெட்டிக்கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிராம பஞ்சாயத்து தலைவர்
தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே சப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் கடப்பட்டி(வயது 32). கோழிப்பண்ணை உரிமையாளரான இவர் சப்பி கிராம பஞ்சாயத்து தலைவராகவும் இருந்து வந்தார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் அரசியல் ரீதியாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அன்று இரவு பசவராஜ் கடப்பட்டி தனது நண்பர்கள் சிலருடன் சப்பி கிராமம் அருகே புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு உணவு சாப்பிட்டு முடித்தவுடன் அவர் தனது நண்பர்கள் மைலாப்பூர், ஜெகதீஷ் ஆகியோருடன் வீட்டிற்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை மைலாப்பூர் ஓட்ட பசவராஜ் கடப்பட்டியும், ஜெகதீசும் பின்னால் அமர்ந்திருந்தனர்.
கொலை
அவர்கள் ஆர்.கே. அகடி கிராஸ் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென ஒரு காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள், பசவராஜ் கடப்பட்டி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் அந்த மர்ம நபர்கள் காரில் இருந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கி பசவராஜ் கடப்பட்டியை சரமாரியாக வெட்டத்தொடங்கினர்.
இதைப்பார்த்த மைலாப்பூரும், ஜெகதீசும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் அந்த மர்ம நபர்கள் பசவராஜ் கடப்பட்டியை மட்டுமே கொலை செய்யும் நோக்கில், அவரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பசவராஜ் கடப்பட்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இதையடுத்து மர்ம நபர்கள் 5 பேரும் தாங்கள் வந்த காரிலேயே அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
பரபரப்பு
பின்னர் நடந்த சம்பவம் குறித்து மைலாப்பூரும், ஜெகதீசும் உப்பள்ளி புறநகர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பசவராஜ் கடப்பட்டியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக கிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பசவராஜ் கடப்பட்டியை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். கிராம பஞ்சாயத்து தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story