வெள்ளாற்றில் மிதக்கும் ‘தெர்மாகோலை’ அகற்றக்கோரி தொழுதூர் அணைக்கட்டில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்


வெள்ளாற்றில் மிதக்கும் ‘தெர்மாகோலை’ அகற்றக்கோரி தொழுதூர் அணைக்கட்டில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2018 3:15 AM IST (Updated: 26 Nov 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளாற்றில் மிதக்கும் தெர்மாகோலை அகற்றக்கோரி தொழுதூர் அணைக்கட்டில் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநத்தம், 


திட்டக்குடி அடுத்த ராம நத்தம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே உள்ளது தொழுதூர் அணைக்கட்டு. தற்போது, இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு ‘தெர்மாகோல்’ அட்டைகளை பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பயன்படுத்திய, ‘தெர்மாகோல்’கள் அனைத்தையும் அப்புறப்படுத்தாமல், அணைக் கட்டுக்கு உள்பகுதியிலேயே போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்த போதே, அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள், பருவமழை பெய்தால் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரும் எனவே அதற்குள், அந்த பகுதியை சுத்தம் செய்திட வேண்டும் என்று இப்பணியை மேற்கொண்டு வந்தவர்களிடம் வலியுறுத்தினர்.

ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள், இதை கண்டு கொள்ளவில்லை. தற்போது பருவமழை தொடங்கி பெய்து வருவதால், வெள்ளாற்றில் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியது. 8 அடி கொள்ளளவு கொண்ட அணைக்கட்டு பகுதியில் தற்போது 4 அடி அளவில் தண்ணீர் உள்ளது.

இந்த நிலையில், வெள்ளாற்றில் ஓடும் தண்ணீரில் ‘தெர்மாகோல்கள்’ மிதக்கின்றன. சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு இவை மிதப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆறு முழுவதும் ‘தெர்மாகோல்’களாகவே தெரிகின்றது.

இவ்வாறு மிதப்பதால் கால்நடைகள் தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன், மீன் மற்றும் பிற உயிரினங்கள் தண்ணீரில் வாழ முடியாத நிலை ஏற்படும். மேலும் இந்த தண்ணீரை பாசனமாக பெறும் விளைநிலங்களில் பயிர்களும் நன்கு செழித்து வளராது என்று கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர் பசுமை இயக்கம் ரமேஷ், சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோவிந்தசாமி மற்றும் தன்னார்வலர்கள் மாயகிருஷ்ணன், அருளேசன், ஊமைத்துரை, காவாஸ்கர் உள்பட பலர் நேற்று திடீரென அணைக்கட்டில் இறங்கி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சுகாதாரத்தை காத்திடும் வகையில் உடனடியாக வெள்ளாற்று பகுதியை சுத்தம் செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறையை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் அங்கிருந்து கலைந்து செல்ல போவதில்லை என்று அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார், சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story