தொடர் மழை எதிரொலி: வறண்டு கிடந்த வெலிங்டன் ஏரிக்கு தண்ணீர் வந்தது - விவசாயிகள் மகிழ்ச்சி
வறண்டு கிடந்த வெலிங்டன் ஏரிக்கு தற்போது பெய்த தொடர் மழையால் தண்ணீர் வந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி அருகே உள்ள கீழ்செருவாய் கிராமத்தில் உள்ளது வெலிங்டன் ஏரி. கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் ஆதாரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. 31 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி மூலம் சுமார் 28 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெற்று வருகிறது. ஏரிக்கு வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தொழுதூர் அணைக்கட்டு வழியாக தண்ணீர் வரத்து இருக்கும். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஓடை வழியாகவும் தண்ணீர் வரும். தற்போது, நிலவிய வறட்சியின் காரணமாக ஏரி வறண்டு கிடந்தது. தற்போது, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து தொடங்கி இருக்கிறது. அதன்படி, லக்கூர், வெங்கனூர் ஓடைகள் வழியாக கடந்த 2 நாட்களாக அதிகளவில் தண்ணீர் வரத்து இருந்தது. இதன்காரணமாக, ஏரியின் நீர்மட்டமும் படிப்படியாக உயர தொடங்கி, நேற்றைய நிலவரப்படி 7.60 அடியாக இருந்தது. வறண்டு கிடந்த ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கி இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி பாஸ்கரிடம் கேட்ட போது, வெலிங்டன் ஏரிக்கு தொழுதூர் அணைக்கட்டில் இருந்து பிரதான வாய்க்கால் மூலம் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் கொண்டு வர முடியும். அதாவது, 8 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கட்டில் 6 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே இந்த வெலிங்டன் ஏரிக்கு வாய்க்காலில் தண்ணீர் அனுப்பி வைக்க முடியும். ஆனால் தற்போது தொழுதூர் அணைக்கட்டில் 4 அடியில் தான் தண்ணீர் உள்ளது. எனவே தண்ணீர் அனுப்ப முடியாத நிலை இருக்கிறது.
அதேநேரத்தில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், சில ஓடைகள் வழியாக தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் நீர்மட்டமும் உயர தொடங்கி உள்ளது. தொடர்ந்து மழை இருந்தால் ஏரியின் நீர்மட்டம் உயரும், மேலும் ஏரியையும் தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில், வெலிங்டன் ஏரியானது 16 அடியை தான் தொட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது பெய்து வரும் பருவமழையால் ஏரிக்கு நீர் வரத்து இருந்தது. ஆனால் நேற்று மழை ஓய்ந்து காணப்பட்டதால், ஓடைகளில் இருந்து வந்த நீர் வரத்தும் நின்று போனது. எனவே தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால், நீர் வரத்து அதிகரித்து, இந்த ஆண்டு ஏரியானது உச்ச நீர்மட்டத்தை தொடும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
Related Tags :
Next Story