மாவட்ட செய்திகள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்: மாணவ-மாணவிகளுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம் வழங்கினார் + "||" + Chidambaram Annamalai University: For students, Governor Panwarilal Purohit was awarded

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்: மாணவ-மாணவிகளுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம் வழங்கினார்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்: மாணவ-மாணவிகளுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம் வழங்கினார்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
கடலூர், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 82-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரான தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன் வரவேற்று ஆண்டு அறிக்கை வாசித்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 42 மாணவ-மாணவிகளுக்கு தங்க பதக்கங்களுடன், பட்டங்களையும், பல்கலைக்கழக தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற 101 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களுடன், பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் ரொக்கப்பரிசுகளையும், 143 பேருக்கு முனைவர் பட்டங்களையும் நேரில் வழங்கினார். இதன் மூலம் நேரடியாக 286 பேர் பட்டம் பெற்றனர். இதையடுத்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த விழாவின் மூலம் இப்பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியல், கல்வியியல் உள்ளிட்ட 10 துறைகளில் நேரடியாக பயின்று தேர்ச்சி பெற்ற 5 ஆயிரத்து 808 மாணவ-மாணவிகளும், தொலைதூரக்கல்வி மூலம் பயின்று தேர்ச்சி பெற்ற 52 ஆயிரத்து 764 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 58 ஆயிரத்து 572 மாணவ-மாணவிகள் பட்டம் பெற்றனர்.

முன்னதாக மத்திய நிர்வாக தீர்ப்பாய தலைவரும், ஐதராபாத் பல்கலைக்கழக வேந்தரும், பாட்னா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான லி.நரசிம்மரெட்டி பட்டமளிப்பு விழாவில் பேசியதாவது:-

கல்வியில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது. நாட்டின் உயர்கல்வித்துறையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு சிறப்பான இடம் உள்ளது. சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு இப்பல்கலைக்கழகம் கல்வி வழங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனர் அண்ணாமலை செட்டியார் திறமையான தொழில் அதிபராக இருந்தும், தனது கணிசமான செல்வத்தை உயர்கல்வியை பரப்புவதற்காக செலவிட்டார். ஆனால் நவீனகால கல்வியாளர்கள் பணம் ஈட்டுவதற்காக கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள். சுகாதாரத்துறையும் வியாபார நடவடிக்கையாக மாறி விட்டது. இது ஒரு ஆபத்தான போக்காகும். இப்போக்கை சமுதாயத்துக்கு சேவையாற்ற வேண்டும் என்ற உணர்வின் மூலமே கட்டுப்படுத்த முடியும்.

இந்த பல்கலைக்கழகம் நிறைய அறிஞர்களை உருவாக்கி உள்ளது. இன்று பட்டங்கள் பெறும் மாணவ-மாணவிகள் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் நன்னெறிகளை பின்பற்றி நல்லகுடிமகன்களாக, மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை