கெடிலம் ஆற்றின் குறுக்கே: கடலூரில் ரூ.25 கோடியில் புதிய மேம்பாலம்


கெடிலம் ஆற்றின் குறுக்கே: கடலூரில் ரூ.25 கோடியில் புதிய மேம்பாலம்
x
தினத்தந்தி 25 Nov 2018 10:00 PM GMT (Updated: 25 Nov 2018 11:38 PM GMT)

கடலூர் கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. இதற்கான மண் பரிசோதனை நேற்று நடந்தது.

கடலூர், 

கடலூர் புதுநகரையும், திருப்பாதிரிப்புலியூரையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தான் முன்பு வாகனங்கள் சென்று வந்தன. ஆனால் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமப்பட்டன.

இதையடுத்து அதன் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டது. அண்ணா பாலம் என்று பெயரிடப்பட்ட இந்த பாலம் வழியாக தான் தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால் அந்த பாலத்தில் சிறு வியாபாரிகள் கடை வைத்திருந்தனர். இருப்பினும் பாலம் சேதமடைந்து இருப்பதால் அதில் இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதற்கிடையே பாலத்தின் ஒரு பகுதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது வியாபாரிகள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருந்த போதிலும் அந்த பாலத்தின் வழியாக சென்ற குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட குழாய் உடைந்து விழுந்தன.

இதன்பிறகு அந்த பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, அதில் தற்போது குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் செல்கிறது. இதற்கிடையே தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் அண்ணா பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழ ஆரம்பித்து விட்டன. இதையடுத்து சேதமடைந்த பகுதிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதும் இந்த பாலம் வழியாக தான் சிதம்பரம், சீர்காழி, தஞ்சை ,நாகை, திருவாரூர், வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கும், மறுமார்க்கத்தில் புதுச்சேரி, சென்னை போன்ற இடங்களுக்கும் வாகனங்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப, போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏற்கனவே ஆங்கிலேயர்கள் கட்டிய இரும்பு பாலத்தை இடித்து விட்டு கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிதாக ரூ.25 கோடியில் மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த பாலத்தின் கீழே மண்ணின் தன்மை எப்படி உள்ளது. பாலம் கட்டும் ஸ்திரத்தன்மை உள்ளதா? என்று நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மண் பரிசோதனை செய்தனர்.

இது பற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, அண்ணா பாலத்துக்கு மாற்றாக புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.25 கோடியில் திட்டம் தயார் செய்ய இருக்கிறோம். முதல் கட்டமாக மண் பரிசோதனையை தொடங்கி இருக்கிறோம் என்றார்.

Next Story