சின்னதடாகம் பகுதியில்: வாழை தோட்டங்களை சேதப்படுத்திய யானைகள்


சின்னதடாகம் பகுதியில்: வாழை தோட்டங்களை சேதப்படுத்திய யானைகள்
x
தினத்தந்தி 25 Nov 2018 10:00 PM GMT (Updated: 26 Nov 2018 12:02 AM GMT)

சின்னதடாகம் பகுதியில் புகுந்து வாழை தோட்டங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

துடியலூர், 

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அனுவாவி சுப்பிரமணிய சாமி கோவில் மலைப்பகுதியில் காட்டுயானைகள், காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

மேலும் காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், நாசம் செய்தும் வருகின்றன. இந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட 4 கும்கி யானைகள் வனத்துறையினர் அழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சின்னதடாகம், பெரியதடாகம், சோமையனூர் பகுதிகளில் குட்டியுடன் 3 யானைகள் புகுந்தன. இந்த யானைகள் சின்னதடாகத்தில் உள்ள ஜெயக்குமார் என்பவரின் விவசாய தோட்டத்தில் நுழைந்து 100-க்கும் மேற்பட்ட வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. மேலும், அருகே உள்ள தோட்டத்தில் சோளப்பயிர்களையும் சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, காட்டு யானைகள் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரண தொகையை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு தொகையை உடனடியாக மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். மேலும், காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story