பஞ்சமி தீர்த்தம் அன்று சங்கிலி பறிப்பை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் ஆலோசனைகூட்டத்தில் அதிகாரி தகவல்
பஞ்சமி தீர்த்தம் அன்று சங்கிலி பறிப்பை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுவார்கள் என ஆலோசனைக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜன் கூறினார்.
திருமலை,
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 4–ந்தேதியில் இருந்து 12–ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:–
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவின்போது நான்கு மாடவீதிகள், வாகன மண்டபம், அன்னதானக்கூடம், புஷ்கரணி, தோளப்ப கார்டன் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். அங்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
கடந்த ஆண்டு நடந்த பிரம்மோற்சவ விழாவைவிட இந்த ஆண்டு கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாதுகாப்புப் பணிக்காக கோவில் உள்ளே, முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அதற்காக ஒரு கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்படும்.
வாகன சேவையில் நெரிசல் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள். நெரிசலை தவிர்க்க தரிசன கவுண்ட்டர்கள் அமைக்கப்படும். பஞ்சமி தீர்த்தம் அன்று பெண் பக்தர்கள் புஷ்கரணிக்குச் சென்று வர தனித்தனி வரிசைகள் அமைக்கப்படும்.
பக்தர்கள் நடமாடும் இடங்களிலும், பெண் பக்தர்கள் புனித நீராடும்போதும், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடப்பதை தடுக்க தீவிர கண்காணிப்புப் பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். புஷ்கரணியில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருமலை–திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை முதன்மை அதிகாரி கோபிநாத்ஜாட்டி பேசுகையில், நான் ஏற்கனவே திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளேன். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளேன்.
பிரம்மோற்சவ விழாவில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும். டிசம்பர் 8–ந்தேதி யானை வாகன வீதிஉலா, 9–ந்தேதி கருட வாகன வீதிஉலா, 12–ந்தேதி பஞ்சமி தீர்த்தம் ஆகியவை நடக்கிறது. இவை அனைத்தும் முக்கிய நிகழ்ச்சிகளாகும். 3 நாட்களிலும் பக்தர்கள் கூடுவார்கள். எந்தவித அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும், என்றார்.
கூட்டத்தில் திருப்பதி கிழக்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முனிராமையா, ரவிமனோகராச்சாரி, திருச்சானூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இ.எம்.எஸ்.நாயுடு, தேவஸ்தான கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story