பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம், திருநங்கைகள் மனு


பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம், திருநங்கைகள் மனு
x
தினத்தந்தி 26 Nov 2018 11:00 PM GMT (Updated: 26 Nov 2018 4:02 PM GMT)

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வீட்டுமனை கேட்டு கலெக்டர் பிரபாகரிடம், திருநங்கைகள் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட திருநங்கைகள் நல சங்க நிறுவன தலைவர் லதாம்மா தலைமையில் துணைத் தலைவர் நதியா, பொருளாளர் ஷர்மிளா, செயலாளர் சிவரஞ்சனி, இணை செயலாளர் மைதிலி மற்றும் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் பிரபாகரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதியில் மட்டும் சுமார் 150 திருநங்கைகள் வசித்து வருகிறோம். அன்றாட வாழ்வை ஓட்டுவதில் சிரமப்படும் எங்களுக்கு வாடகைக்கு கூட வீடு கொடுக்க பலர் தயங்குகின்றனர். எனவே, நாங்கள் நிம்மதியாக ஒரு இடத்தில் வசிக்க அரசு சார்பில் இலவச வீட்டுமனை வழங்கிட வேண்டும். அதே போல் எங்கள் வாழ்க்கையை நிம்மதியாக கழித்திட தகுதிக்கு ஏற்றாற்போல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பர்கூரை அடுத்த ஜெகதேவி அம்பேத்கர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஜெகதேவி-பர்கூர் சாலையில் உள்ள ஒரு கிரானைட் கம்பெனி அருகில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் 200 சதுர அடி பரப்பளவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அம்பேத்கர் காலனி, எம்.ஜி.ஆர். காலனி, ஜெ.ஜெ காலனி பொதுமக்கள் மட்டுமின்றி மற்ற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு நடத்துகின்றனர்.

இந்த நிலையில் கோவில் அருகில் உள்ள நிலத்தை வாங்கிய நபர் கோவில் இடத்தை மற்றவர்களுக்கு விற்பனை செய்வதற்காக, போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக நெடுஞ்சாலைத்துறையிடம் பொய் புகார் அளித்து கோவிலை இடிக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார். இந்த கோவிலால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லாத நிலையில் பக்தர்களின் மனம் புண்படும் படி கோவிலை இடிக்கும் நடவடிக்கையால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, பொய் புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுத்து, தொடர்ந்து கோவிலில் வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story