விபத்தில் இறந்த எலக்ட்ரீசியன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுபஸ் ஜப்தி
விபத்தில் இறந்த எலக்ட்ரீசியன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசுபஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் நேற்று நாமக்கல் பஸ்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர்புதூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 36). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந் தேதி மோட்டார் சைக்கிளில் நாமக்கல்லில் இருந்து மோகனூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். சிங்கிலிப்பட்டி பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த அரசு டவுன்பஸ் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் சார்பில் வக்கீல் ராஜா நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 2-ந் தேதி விபத்தில் இறந்த செல்வராஜின் குடும்பத்திற்கு சேலம் அரசு போக்குவரத்து கழகம் ரூ.8 லட்சத்து 7 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீட்டு தொகையை வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இதையடுத்து செல்வராஜ் குடும்பத்தினர் நிறைவேற்று மனுவை மாவட்ட மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோ சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசுபஸ் ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று திருச்சியில் இருந்து சேலம் செல்ல இருந்த அரசுபஸ் நாமக்கல்லில் கோர்ட்டு அமீனா ரவி முன்னிலையில் ஜப்தி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று நாமக்கல் பஸ்நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story