திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 27 Nov 2018 4:00 AM IST (Updated: 26 Nov 2018 9:56 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

எலச்சிப்பாளையம்,

திருச்செங்கோடு அருகே உள்ள கருமகவுண்டம்பாளையம் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கருமகவுண்டம்பாளையம் பஸ் நிலையம் அருகில் அம்மையப்பா நகர், சாஸ்தா கார்டன், பாலாஜி நகர், அம்மையப்பா அனெக்ஸ், கவுண்டிபாளையம் ஆகிய குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை செல்கிறது. இந்த பகுதிகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

கருமகவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் அரசு உயர்நிலை பள்ளியும், திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகமும், மற்றும் மருத்துவமனையும் அமைந்துள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் அரசு புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கும் இடையூராக இருக்கும். பல்வேறு குற்ற செயல்கள் நடக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, மேற்கண்ட இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடையை அமைக்க கூடாது. இது தொடர்பாக கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story