மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 41 சிறுவர்-சிறுமிகளுக்கு ரூ.10.46 லட்சம் உதவித்தொகை கலெக்டர் ரோகிணி வழங்கினார்


மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 41 சிறுவர்-சிறுமிகளுக்கு ரூ.10.46 லட்சம் உதவித்தொகை கலெக்டர் ரோகிணி வழங்கினார்
x
தினத்தந்தி 26 Nov 2018 11:00 PM GMT (Updated: 26 Nov 2018 4:36 PM GMT)

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 41 சிறுவர், சிறுமிகளுக்கு ரூ.10 லட்சத்து 46 ஆயிரம் உதவித்தொகையை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

சேலம், 

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். நேற்று மொத்தம் 322 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் மற்றும் மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார்.

மேலும் சமூக பாதுகாப்புத்துறையின் சார்பில் நிதி ஆதார திட்டத்தின் கீழ், பெற்றோரை இழந்த சிறுவர், சிறுமிகள், வாழ்வாதாரம் இன்றி இருக்கும் பெற்றோர்களின் சிறுவர், சிறுமிகள் என 41 பேருக்கு ரூ.10 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் பராமரிப்பு உதவித்தொகைக்கான காசோலையை கலெக்டர் ரோகிணி வழங்கினார். இந்த உதவித்தொகையை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் சிறுவர், சிறுமிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story