காஞ்சீபுரம், புட்லூரில் தாசில்தார் வீடு உள்பட 3 இடங்களில் திருட்டு


காஞ்சீபுரம், புட்லூரில் தாசில்தார் வீடு உள்பட 3 இடங்களில் திருட்டு
x
தினத்தந்தி 27 Nov 2018 4:15 AM IST (Updated: 27 Nov 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரை அடுத்த புட்லூரில் தாசில்தார் வீடு உள்பட 3 இடங்களில் திருட்டு நடைபெற்றது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் லிங்கப்பன் தெருவில் வசிப்பவர் நாகராஜன். இவர், பறக்கும் படை தாசில்தாராக உள்ளார். இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். அப்போது மர்ம நபர்கள் அவரது வீட்டின் முன்பக்க கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த பித்தளை பொருட்களை திருடிச்சென்று விட்டனர். இதுபற்றி தாசில்தார் நாகராஜன் அளித்த புகாரின்பேரில் பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதே தெருவில் வசிப்பவர் லட்சுமி(வயது 52). இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது கணவர் மற்றும் பிள்ளைகள் வெளியூரில் உள்ளதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு லட்சுமி வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவை திறந்து அதில் வைத்து இருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே உள்ள புட்லூர் கிராமம் கணேஷ் விஸ்டா நகரில் வசித்து வருபவர் சங்கர். மினி வேன் டிரைவர். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. கணவன்-மனைவி இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவில் கலந்துகொள்ள சென்று விட்டார்.

நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது யாரோ மர்மநபர்கள், கள்ளச்சாவி போட்டு வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.10ஆயிரத்தை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி சங்கர் அளித்த புகாரின்பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story