வீட்டுமனை வரைமுறை சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது


வீட்டுமனை வரைமுறை சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2018 4:45 AM IST (Updated: 27 Nov 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை வரைமுறை சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரசு. வெள்ளி வியாபாரி. இவருக்கு அன்னதானபட்டி பகுதியில் உள்ள அவருடைய தாயார் நிலம் சமீபத்தில் கிடைத்தது. இந்த நிலத்துக்கு வீட்டுமனை அங்கீகாரம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். இதையடுத்து சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் 3-வது தளத்தில் உள்ள நகரமைப்பு பிரிவில், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளது, எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்துமாறு, வெள்ளி வியாபாரி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் கட்டணமாக ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-யை செலுத்தினார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சியில் உள்ள நகரமைப்புபிரிவு அலுவலகத்துக்கு வீட்டுமனை வரைமுறை சான்றிதழ் பெற அவர் சென்றார். அப்போது அங்கிருந்த செயற்பொறியாளர் கலைவாணியை அரசு தொடர்புகொண்டு சான்றிதழ் குறித்து கேட்டார். அதற்கு கலைவாணி, அனுமதி சான்றிதழ் தயாராகிவிட்டது, ஆனால் இதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கூறினார். இதைக்கேட்ட வெள்ளி வியாபாரி சான்றிதழ் பெற லஞ்ச பணம் தருவதாக கலைவாணியிடம் ஒப்புக்கொண்டார்.

இதனிடையே லஞ்சம் கொடுக்க மனமில்லாத அரசு இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை அவ, நகரமைப்பு பிரிவில் இருந்த செயற்பொறியாளர் கலைவாணியிடம் கொடுத்தார். அப்போது கலைவாணி லஞ்ச பணத்தை சாமர்த்தியமாக தன்னுடைய கையால் வாங்காமல், தனது உதவியாளர் உஸ்மானிடம் கொடுங்கள் என அரசுவிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அரசு ரூ.5 ஆயிரத்தை கலைவாணியின் உதவியாளர் உஸ்மானிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான போலீசார் கையும் களவுமாக உஸ்மானை பிடித்தனர். பின்னர் போலீசார் அலுவலகத்தில் உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்லாத வகையில் கதவை பூட்டினர். இதையடுத்து அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சான்றிதழ் பெற வந்தோர் என அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து உஸ்மானிடம் விசாரித்தபோது தான் லஞ்ச பணம் கேட்கவில்லை எனவும், செயற்பொறியாளர் கலைவாணி தான் லஞ்ச பணத்தை வாங்க கூறினார் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்த ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் கணினிகள் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கலைவாணி, உஸ்மான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர். மேலும் பெண் அதிகாரி கலைவாணி செயற்பொறியாளராக நகரமைப்பு பிரிவில் சேர்ந்த காலத்தில் இருந்து யார், யாரிடம் லஞ்சம் வாங்கினார் என்றும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதுவரை கலைவாணி 1,200 பேருக்கு வீட்டுமனை அங்கீகார சான்றிதழ் வழங்கியுள்ளதும், அவர்களில் சிலரிடம் தலா ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நேற்று மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story