கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாய்–மகள் உள்பட 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தினர்
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாய்–மகள் உள்பட பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் அடிலம் ஊராட்சி சிக்கத்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 50). இவருடைய மகள் ராசாத்தி(21). இவர்கள் 2 பேரும் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு கண்இமைக்கும் நேரத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் 2 பேரையும் தீக்குளிக்கும் முயற்சியில் இருந்து தடுத்து நிறுத்தினார்கள்.
இதுதொடர்பாக வருவாய் துறையினர் மற்றும் போலீசார் காளியம்மாள் மற்றும் ராசாத்தியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பட்டப்படிப்பை முடித்த ராசாத்திக்கும், கட்டிட மேஸ்திரியான கோவிந்தன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அதன்பின் கோவிந்தன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக பலமுறை பஞ்சாயத்து நடைபெற்று உள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி காரிமங்கலம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் காளியம்மாள், ராசாத்தி ஆகியோர் தீக்குளிக்க முயன்றிருப்பது தெரியவந்தது.
இதேபோல் பென்னாகரம் தாலுகா சோம்பட்டியை சேர்ந்த ஜெயமதி (50) தனது மகள் வெண்ணிலா மற்றும் பேரக்குழந்தைகளுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தார். அங்கு உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஜெயமதியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது வெண்ணிலாவிற்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் அவருடைய கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், வெண்ணிலா மற்றும் குழந்தைகளை வீட்டை விட்டு துரத்த முயற்சிப்பதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரி தீக்குளிக்க முயன்றிருப்பதும் தெரியவந்தது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாய்–மகள் உள்பட 2 குடும்பங்களை சேர்ந்த 3 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.