பெரியநாயக்கன்பாளையம் அருகே: காட்டுயானை தாக்கி பெண் படுகாயம்
பெரியநாயக்கன்பாளையம் அருகே காட்டுயானை தாக்கி பெண் படுகாயம் அடைந்தார்.
பெ.நா.பாளையம்,
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள தெக்குபாளையம் அறிவொளி நகர் பகுதியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின் மனைவி விஜயா என்ற விஜயலட்சுமி (வயது 45). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை 6 மணியளவில் வீட்டில் இருந்து துடியலூர் சந்தைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது நேற்று முன்தினம் இரவு மலைப்பகுதியில் இருந்து இறங்கி மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊருக்குள் புகுந்த 5 காட்டு யானைகள் வனப்பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தன. இந்த யானைகளில் ஒன்று இடிகரை கியாஸ் கம்பெனி பின்புறம் ஒத்தையடி பாதையில் நடந்து வந்த விஜயலட்சுமியை தாக்கி, தூக்கிவீசியது.
இதில் அவருக்கு தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜயலட்சுமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனசரக அலுவலர் (பொறுப்பு) சுரேஷ்குமாரின் உத்தரவின்படி, வனக்காப்பாளர் தினேஷ்குமார் உள்பட வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இடிகரை காட்டுப்பகுதியில் சுற்றுத்திரிந்த 5 யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
முன்னதாக காட்டு யானைகள் மேட்டுப்பாளையம் சாலையில் நடுவே உள்ள தடுப்பு கம்பிகளை உடைத்தும், தனியார் கம்பெனியின் சுற்று சுவரை உடைத்தும் சென்றுள்ளன. மேலும் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் வீட்டின் அருகே வைத்திருந்த மாட்டு தீவனங்களை தின்றும், கீழே கொட்டியும் நாசப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, யானைகள் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த யானைகளை விரட்ட 4 கும்கி யானைகளையும் கொண்டு வந்துள்ளனர். மேலும் ‘ஹேலிகேம்‘ (ஆளில்லாத குட்டி விமானம்) மூலம் கண்காணித்து யானைகளை விரட்டுவதாக வனத்துறையினர் கூறி வருகின்றனர். ஆனால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
மேலும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் கடந்த 8 மாதத்திற்கும் மேலாக வனச்சரகர் பணியிடம் காலியாக உள்ளது. வனத்துறையினர் அவ்வப்போது கோவை வனப்பகுதிக்கு சென்று விடுவதால் இங்கு வரும் யானைகளை விரட்ட வனத்துறை யினர் இல்லை என்றனர்.
இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, விரைவில் புதிய வனச்சரகர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story