ரூ.152 கோடியில் கட்டப்பட்டது திறப்பு விழா காணும் முன்பு, புயலுக்கு இரையான தானிய சேமிப்பு கிடங்கு எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது
நாகை அருகே ரூ.152 கோடியில் கட்டப்பட்ட தானிய சேமிப்பு கிடங்கு திறப்பு விழா காணும் முன்பு, புயலுக்கு இரையாகி எலும்பு கூடாக காட்சி அளிக் கிறது.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப் படும்.
ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தாமதமாக திறக்கப்பட்டது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் நெல் மற்றும் தானியங்களை சேமித்து வைப்பதற்காக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஆங்காங்கே நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாகை மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் நெல் சிமெண்ட் மற்றும் தானிய சேமிப்பு கிடங்கு 152 கோடியே 94 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
172.68 ஏக்கர் பரப்பளவில் இந்த சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டது. சேமிப்பு கிடங்கில் 16 கட்டிடங்கள் உள்ளன. ஒரு லட்சம் டன் தானியங்களை சேமிக்கும் வகையில் இந்த சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு கிடங்கு ஆசியாவிலேயே பெரிய சேமிப்பு கிடங்குகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த சேமிப்புக் கிடங்கு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி நள்ளிரவில் தாக்கிய கஜா புயலுக்கு இந்த கட்டிடங்கள் அனைத்தும் இரையானது. கட்டிடங்கள் மேற்கூரைகளும் பக்கவாட்டு சுவர்கள் என அனைத்தும் சேதமடைந்து எலும்புக்கூடு போல காட்சியளிக்கிறது. இந்த வளாகத்தில் உள்ள 16 கட்டிடங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த கட்டிடங்கள் மட்டும் 69 கோடியே 50 லட்சம் அளவிற்கு சேதம் அடைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story