படைபுழு தாக்கிய மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு கோரி: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா
படைபுழு தாக்கிய மக்காச்சோள பயிருக்கு உரிய இழப்பீடு கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது கொளத்தூர், கொளக்காநத்தம், அயினாபுரம், அணைப்பாடி, சிறுகன்பூர், நல்லறிக்கை, சாத்தனூர் குடிக்காடு, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு கூடினர்.
பின்னர் அவர்கள், படை புழு தாக்கிய மக்காச்சோள பயிர்களை கையில் ஏந்தியவாறு, உரிய இழப்பீடு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கலெக்டர் சாந்தாவை சந்திக்க விவசாயிகள் புறப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்றால் கிராமத்தில் ஒருவர் மட்டும் செல்ல வேண்டும் என விவசாயிகளை கேட்டுக் கொண்டனர். ஆனால், விவசாயிகளோ நாங்கள் அனைவரும் கலெக்டரை சந்தித்து, படை புழு தாக்கிய மக்காச்சோள பயிர்களை காண்பித்து முறையிடுவோம் என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) சந்தானகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் விவசாயிகள் நாங்கள் அனைவரும் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்போம் என்றனர். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரையும் மீறி கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் விவசாயிகள் நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
தொடர்ந்து போலீசார், வேளாண்மை துறை அதிகாரிகள் அனைத்து விவசாயிகளும் கலெக்டரை சந்திக்க முடியாது என்றனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கலெக்டரை சந்தித்து எங்கள் குறையை கூறி விட்டு தான் செல்வோம் என்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், கலெக் டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது கையில் வைத்திருந்த படை புழு தாக்கிய பயிர்களை விவசாயிகள் காண்பித்து கூறுகையில், மக்காச்சோளத்தில் படை புழு தாக்கியுள்ளதால் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள். எனவே படை புழு தாக்கிய மக்காச்சோள பயிருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்குவதற்கு கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த கலெக்டர் சாந்தா, தர்ணா போராட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அப்போது கண்ணீர் மல்க விவசாயிகள் படை புழு தாக்கிய மக்காச்சோள பயிர்களை கலெக்டரிடம் காண்பித்து அரசிடம் இருந்து உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறியதை தொடர்ந்து, விவசாயிகள் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story