தஞ்சை அருகே கிராமமக்கள் சாலை மறியல் முறையாக கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்


தஞ்சை அருகே கிராமமக்கள் சாலை மறியல் முறையாக கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Nov 2018 3:45 AM IST (Updated: 27 Nov 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

முறையாக கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தஞ்சை அருகே கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. 60 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், மா, பலா உள்ளிட்ட மரங்கள் சேதம் அடைந்தன. சேத விவரம் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை எனவும், அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய கோரியும் தஞ்சையை அடுத்த வேங்குராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த மக்கள் தஞ்சை-மருங்குளம் சாலையில் நேற்றுகாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) விஜயலட்சுமி மற்றும் வருவாய் ஆய்வாளர் அருள்கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய 3 தாலுகாக்களில் அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்படுவதை போல, எங்கள் கிராமத்திலும் அனைவருக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் முறையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.

இதை கேட்ட அதிகாரிகள், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள், பகுதியாக பாதிக்கப்பட்ட பகுதிகள் என கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. வீடுகள் முழுமையாக சேதம் அடைந்தாலும், அதிக அளவில் ஓடுகள் காற்றில் பறந்திருந்தாலும் கண்டிப்பாக நிவாரணம் கிடைக்கும் என்று கூறினர்.

எங்கள் கிராமத்தில் கணக்கெடுக்க அதிகாரிகள் வரும்போது எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்த வரும்போது யாருக்கும் நாங்கள் தகவல் தெரிவிப்பதில்லை. அரசியல் கட்சியினரும், சாதி ரீதியாக சிலரும் எங்களை சந்தித்து ஏதாவது கூறினால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே யாரிடமும் சொல்லாமல் தான் வந்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீட்டின் மீது மரங்கள் விழுந்து கிடக்கிறது. இந்த வீடுகளுக்கு எல்லாம் நிவாரணம் கிடையாது என்று அதிகாரிகள் கூறுவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதை கேட்ட அதிகாரிகள், உங்கள் ஊரில் 7 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்து இருக்கிறது. நீங்கள் நேரில் வந்து உங்களது வீடுகளை எங்களிடம் காட்டுங்கள். நாங்கள் பார்க்கிறோம் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். இதனால் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து கிராமமக்கள் கூறும்போது, ஒரத்தநாடு பகுதியில் அனைத்து வீடுகளும் பாதிக்கப்பட்டதாக நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் எங்கள் கிராமத்தில் வீடுகள் முழுமையாக சேதம் அடைந்திருந்தால் மட்டும் தான் நிவாரணம் கிடைக்கும். வீடுகளின் மீது மரங்கள் விழுந்து கிடந்தால் கூட கிடையாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எங்கள் கிராமத்தில் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர், மின்வசதி விரைவில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Next Story