நடிகர் அம்பரீஷ் மரணம்: மேலும் ஒரு ரசிகர் தற்கொலை தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்


நடிகர் அம்பரீஷ் மரணம்: மேலும் ஒரு ரசிகர் தற்கொலை தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்
x
தினத்தந்தி 27 Nov 2018 2:13 AM IST (Updated: 27 Nov 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்ததால் துக்கம் தாங்காமல் மேலும் ஒரு ரசிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெங்களூரு,

கன்னட திரையுலகின் ஜாம்பவான் நடிகர் அம்பரீஷ் கடந்த 24-ந்தேதி இரவு மரணமடைந்தார். அவரது மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த மரண செய்தியை கேட்டு நேற்று முன்தினம் மண்டியாவை சேர்ந்த அம்பரீசின் ரசிகரான தம்மய்யா என்பவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் மண்டியாவை சேர்ந்த மேலும் ஒரு ரசிகர், அம்பரீசின் இறந்த செய்தியை கேட்டு துக்கம் தாளாமல் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கோரவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரா (வயது 46). கூலி தொழிலாளியான இவர் நடிகர் அம்பரீசின் தீவிர ரசிகர் ஆவார். நடிகர் அம்பரீஷ் மறைந்த செய்தியை கேட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

மேலும் மண்டியா விசுவேஸ்வரய்யா விளையாட்டு மைதானத்தில் வைத்திருந்த அம்பரீசின் உடலுக்கு நேரில் சென்று அவர் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பின்னர் மத்தூர் சென்ற சுரேந்திரா கிராமத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story