அரசாணை நகலை எரித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் போராட்டம் - 54 பேர் கைதாகி விடுதலை


அரசாணை நகலை எரித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் போராட்டம் - 54 பேர் கைதாகி விடுதலை
x
தினத்தந்தி 27 Nov 2018 3:00 AM IST (Updated: 27 Nov 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி அரசாணை நகலை எரித்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 54 பேரை போலீசார் கைது செய்து விடுதலை செய்தனர்.

கரூர்,

மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை, தமிழக அரசின் 7-வது ஊதியக்குழுவின் அரசாணை எண் 234-ஆனது இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறித்து கொண்டது. அதன் பின்னர் தமிழக அரசின் 8-வது ஊதியக் குழுவானது, அரசாணை எண் 303-ன்படி தமிழக அரசு ரூ.20,600 என நிர்ணயித்து அடிப்படை ஊதியத்திலேயே ரூ.14,800 பறித்துக்கொண்டது. இதனை கண்டித்து அந்த 2 அரசாணை நகல்களையும் நவம்பர் 26-ந்தேதி எரித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று அந்த சங்கத்தின் கரூர் கிளை சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமையில் கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாவட்ட பொருளாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதனை தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி அரசாணை நகல்கள் 234, 303 ஆகியவற்றை தீ வைத்து எரித்து ஆசிரியர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் மற்றும் போலீசார் உடனடியாக ஓடி வந்து தண்ணீரை ஊற்றி அணைத்து அந்த அரசாணை நகல்களை கைப்பற்றினர். பின்னர் உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 26 பெண்கள் உள்பட 54 ஆசிரியர் களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story