மோட்டார் சைக்கிள் விபத்தில் டெக்ஸ்டைல் நிறுவன ஊழியர் பலி : மணல் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
கரூரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் டெக்ஸ்டைல் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். இதில் மணல் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,
கரூர் சின்னஆண்டாங்கோவில் ரோடு அம்மன்நகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 52). இவர், கரூர்- ஈரோடு ரோட்டிலுள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று காலை இவர் வழக்கம் போல், தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கரூர்-ஈரோடு சாலையில் கோதை நகர் பஸ் நிறுத்தத்தை தாண்டி காயத்ரிநகர் அருகே சென்ற போது, அந்த வழியாக மணல் ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பாண்டியனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாண்டியன், லாரியின் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். எனினும் இதனை அறியாமல் டிரைவர் அந்த லாரியை சிறிது தூரம் ஓட்டி சென்றார்.
விபத்தினை நேரில் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக ஓடி வந்து மணல் லாரியை சிறைபிடித்தனர். பின்னர் அந்த லாரியின் மீது ஏறிய பொதுமக்கள் அதில், ஆற்று மணலை மறைமுகமாக கடத்த அதன் மீது தேங்காய் மட்டைகளை மூட்டை மூட்டையாக கட்டி அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறினர். பின்னர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கரூரில் மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரூர்-ஈரோடு ரோட்டில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்ட வேகத்தடைகள் அமைக்க வேண்டும். அதிவேகமாக செல்லும் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு, கரூர் டவுன் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து விபத்தில் இறந்த பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அங்கு சென்று அவரது உடலை பார்த்து கதறி துடித்தது காண்போரை கண்கலங்க செய்யும் விதமாக இருந்தது.
இதற்கிடையே விபத்தில் தொடர்புடைய அந்த மணல் லாரியை பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் அந்த லாரியின் டிரைவர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி வெள்ளையூரை சேர்ந்த சிலம்பரசனிடம் (27) போலீசார் விசாரித்த போது, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் இருந்து கரூர் வழியாக ஈரோடு கொடுமுடிக்கு மணல் ஏற்றி கொண்டு சென்றது தெரிய வந்தது. மேலும் லாரியில் மணல் எடுத்து சென்றதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story