பழனியில்: தி.மு.க. கூட்டம் நடந்த மண்டபத்தை வியாபாரிகள் முற்றுகை - இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை
பழனியில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்த திருமண மண்டபத்தை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகளிடம் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார்.
பழனி,
தி.மு.க. சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பழனியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சாமிநாதன் தலைமை தாங்கினார். இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், பழனி மக்கள், வியாபாரிகளுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கிடையே தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடப்பது குறித்து தகவலறிந்த வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் அந்த மண்டபத்தை முற்றுகையிட்டனர்.
இதையறிந்த இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. உடனடியாக மண்டபத்தின் நுழைவு வாயில் அருகே வந்தார். பின்னர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், அடிவாரம் பகுதியில் நடைபாதை வியாபாரிகள் கடை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அப்பகுதியில் கடை வைக்க எங்களுக்கு அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதையடுத்து எம்.எல்.ஏ., கூறுகையில், வியாபாரிகள் பிரச்சினை குறித்து ஆலோசனை கூட்டத்திலும் பேசியுள்ளேன். மேலும் சட்டமன்ற கூட்டத்தின் போது நிச்சயமாக இந்த பிரச்சினை குறித்து குரல் கொடுப்பேன். மேலும் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி தொடர்ந்து அடிவாரம் பகுதியில் கடை வைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story