கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்; அமைச்சர் மணிகண்டன் தகவல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதுவரை ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு கட்டங்களாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து பட்டுக்கோட்டை மற்றும் திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் அமைச்சர் மணிகண்டன் கொடியசைத்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:– கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் நிவாரண பொருட்களை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பங்களிப்போடு நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது.
தற்போது ரூ.6 லட்சத்து 8 ஆயிரத்து 90 மதிப்பிலான நிவாரண பொருட்கள் திருவாரூர் பகுதிக்கும், ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்து 720 மதிப்பிலான நிவாரண பொருட்கள் பட்டுக்கோட்டை பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இதுவரை மொத்தம் ரூ.40 லட்சத்து 45 ஆயிரத்து 510 மதிப்பிலான நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையத்திற்கு பொருட்களை வழங்கி வருகின்றனர். அவை அனைத்தும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாதுகாப்பாக வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கண்ணபிரான், நாகேசுவரன், தாசில்தார் கார்த்திகேயன், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.