சுகாதாரமற்ற நிலையில் பாலையம்பட்டி ஊராட்சி, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


சுகாதாரமற்ற நிலையில் பாலையம்பட்டி ஊராட்சி, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
x
தினத்தந்தி 27 Nov 2018 4:21 AM IST (Updated: 27 Nov 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

பாலையம்பட்டி ஊராட்சி பகுதியில் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுவதால் இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை ஒன்றியம், பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சிப் பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், பொதுப்பணிதுறை அலுவலகம், அரசு விருந்தினர் மாளிகை, ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் குடியிருப்பு, தாசில்தார் குடியிருப்பு, துணை கண்காணிப்பாளர் அலுவலகம், தாலுகா போலீஸ் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு, மகளிர் போலீஸ் நிலையம் உள்பட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஊராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் முறையான வாருகால் வசதி இல்லாததால் கழிவு நீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி சுகாதாரமற்று கிடக்கிறது. எந்த பகுதியிலும் குப்பை தொட்டிகள் இல்லாததால் ரோடுகளில் குப்பைகள் அனைத்தும் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. முறையான கழிப்பறை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தராததால் பொதுமக்கள் சாலையோர பகுதிகளையே திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி காலை மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் திறந்தவெளி கழிப்பிடத்தாலும், ஆங்காங்கே கொட்டப்படும் இறைச்சி கழிவுகளாலும் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் பொதுமக்கள், குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு உள்ளாகி ஆஸ்பத்திரிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். எனவே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இந்த ஊராட்சியை பார்வையிட்டு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story