கஜா புயல் சேதங்கள் மதிப்பீடு: காரைக்காலில் மத்திய குழுவினர் ஆய்வு


கஜா புயல் சேதங்கள் மதிப்பீடு: காரைக்காலில் மத்திய குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 27 Nov 2018 5:43 AM IST (Updated: 27 Nov 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயல் சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து மீனவர்களின் படகுகள் மற்றும் வயல்களை பார்வையிட்டனர்.

காரைக்கால்,

‘கஜா’ புயல் தாக்கியதில் காரைக்காலில் நூற்றுக் கணக்கான குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், மீன்பிடி படகுகள் சேதம் அடைந்தன. மேலும் ஏராளமான மின்கம்பங்களும் சாய்ந்து விட்டன. புயலால் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்புகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவர்னர் கிரண்பெடி காரைக்காலுக்கு சென்று ஆய்வு செய்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நேற்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

இதன்பின் மதியம் 3 மணியளவில் காரைக்காலுக்கு மத்திய குழுவினர் வந்தனர். காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில், புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.கள் கீதா ஆனந்தன், அசனா, புதுச்சேரி அபிவிருத்தி ஆணையர் அன்பரசு, கலெக்டர் கேசவன், சார்பு கலெக்டர் விக்ராந்த் ராஜா மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் புயல் பாதிப்புகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் புயலால் சேதம் அடைந்த பட்டிச்சேரி, நடுகளம்பேட், வடகட்டளை ஆகிய மீனவ கிராமங்களுக்கு சென்றனர். அங்கு சேதமான மீன்பிடி படகுகள், வலைகள், குடிசைகள் மற்றும் ஆற்றுப் படுகையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு திரண்டிருந்த மக்களிடம் சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது சேத மடைந்த படகுகளுக்கு பதிலாக புதிய படகுகள் வழங்குமாறு மீனவர்கள் கேட்டனர். பின்னர் காக்கமொழி, அத்திபடுகை கிராமங்களில் புயலால் சாய்ந்த தென்னை மரங்கள், மழைநீர் புகுந்த வயல்கள், சேதமடைந்த பயிர்கள் மற்றும் குடிசைகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு சேதங்களை மதிப்பீடு செய்தனர். ஆய்வின்போது அமைச்சர் கமலக்கண்ணன், கோகுல கிருஷ்ணன் எம்.பி., கலெக்டர் கேசவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

காரைக்காலில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 3 மணிநேரம் புயலால் சேதமடைந்த பகுதிகளை மத்திய குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர். ஆய்வை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து ஆலோசனை நடத்த புதுவைக்கு காரில் புறப்பட்டுச் சென்றனர்.

Next Story