ஊழல் இன்றி பணியாற்ற சபதம் ஏற்க வேண்டும்; காவலர்களுக்கு, முதல்-அமைச்சர் அறிவுரை


ஊழல் இன்றி பணியாற்ற சபதம் ஏற்க வேண்டும்; காவலர்களுக்கு, முதல்-அமைச்சர் அறிவுரை
x
தினத்தந்தி 27 Nov 2018 5:44 AM IST (Updated: 27 Nov 2018 5:44 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் காவலர்கள் ஊழல் இன்றி பணியாற்ற சபதம் ஏற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுரை கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி முதல் 134 காவலர்கள் பயிற்சி பெற்றனர். அவர்கள் பயிற்சியின் நிறைவு மற்றும் அணிவகுப்பு நேற்று காலை கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. விழாவிற்கு போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா தலைமை தாங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பயிற்சியில் முதலிடம் பிடித்த காவலர்களுக்கும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் நம் மாநிலத்தில் காவல்துறைக்கு என்று தனித்திறமை உண்டு. இரவு பகல் பார்க்காமல் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கொடுப்பது, குற்றங்களை உடனே கண்டுபிடிப்பது, குற்றவாளிகளை வெளியில் நடமாட விடாமல் பார்த்து கொள்வது. அதுமட்டுமின்றி தொடர் குற்ற செயல்கள் செய்பவர்களை கண்டறிந்து அவர்களை ஒடுக்குவது, போக்குவரத்து சரி செய்வது, சமூக பணிகள் செய்வது போன்றவைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி 2½ ஆண்டுகளுக்கு முன் ஆட்சிக்கு வந்த போது புதுவையில் மக்கள் நிம்மதியாகவும், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு வந்து செல்ல வேண்டும் என்பதற்காகவும் காவல்துறையில் நிர்வாக சீர்திருத்தம் செய்து, அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை முழுமையாக கிடைக்க வேண்டும் என்று உறுதி ஏற்றோம்.

புதுச்சேரி காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். மக்களுக்காக நாம், நமக்காக மக்கள் இல்லை என்ற உணர்வு இருக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் சம்பளம் வாங்குகின்றோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மக்களுக்கு முழு உரிமை தர வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கான உதவியை காவல்துறை மிக சிறப்பாக செய்து வருகிறது. போலீசாரின் ஒத்துழைப்பு இல்லாமல் அமைதியை காண முடியாது. புதுச்சேரியில் நிம்மதியாக இருக்கலாம், தொல்லை இருக்காது, குற்றம் செய்பவர்கள் நம்மை நெருங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சட்டம்-ஒழுங்கை பாதுகாத்து வரும் போலீசாருக்கு அதிக சலுகைகள் வழங்க வேண்டும். பதவி உயர்வு, காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். காவல்துறையை நவீனப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் நிதியை பெற வேண்டியுள்ளது. போலீசார் குற்றங்களை தடுப்பதுடன், குற்றம் நடைபெறுவதற்கு முன் எப்படி தடுப்பது என்ற தகவல்களை சேகரித்து அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். குற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். போலி ஏ.டி.எம். கார்டு மோசடியில் பிற மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பணத்தை இழந்துள்ளனர்.

இந்த வழக்கை சி.ஐ.டி. மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்துள்ளனர். தற்போது மற்றொரு போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளனர். தற்போது பாரம்பரிய குற்றங்கள் மட்டுமின்றி, விஞ்ஞான ரீதியான குற்றங்களும் நடைபெற்று வருகிறது. இவைகளை எதிர்கொள்ள பயிற்சி பெற வேண்டும். ஊழல் இன்றி பணியாற்ற சபதம் ஏற்க வேண்டும். புகார் கொடுக்க வருபவர்களிடம் கடுமையாக பேசக்கூடாது. உரிய நேரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். கடமையில் எப்போதும் முனைப்பாக இருக்க வேண்டும். திறமையை காட்டினால் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story