111 பவுன் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகனுடன் சேர்ந்து நகைகளை ஜோதிடர் மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலம்


111 பவுன் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகனுடன் சேர்ந்து நகைகளை ஜோதிடர் மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலம்
x
தினத்தந்தி 27 Nov 2018 1:42 PM IST (Updated: 27 Nov 2018 1:42 PM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே 111 பவுன் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக மருமகனுடன் சேர்ந்து நகைகளை ஜோதிடர் மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலமானது.

தட்டார்மடம், 

தட்டார்மடம் அருகே 111 பவுன் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக மருமகனுடன் சேர்ந்து நகைகளை ஜோதிடர் மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலமானது.

நகை கொள்ளை போனதாக...

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே அழகப்பபுரம் பஞ்சாயத்து சித்தன்குடியிருப்பைச் சேர்ந்தவர் பால்துரை (வயது 70). ஜோதிடர். இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் 2 வீடுகள் உள்ளன. பால்துரை தனது பூர்வீக ஓட்டு வீட்டில் காலை முதல் மாலை வரையிலும் பொதுமக்களுக்கு ஜோதிடம் பார்ப்பது வழக்கம். பின்னர் அவர் இரவில் பூர்வீக வீட்டின் எதிரே உள்ள மாடி வீட்டில் தூங்குவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி பால்துரையின் பூர்வீக வீட்டின் மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கிருந்த 111 பவுன் நகைகள், ரூ.2½ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக பால்துரை, தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாமனார்-மருமகனிடம் விசாரணை

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பால்துரையின் பூர்வீக வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் 111 பவுன் நகைகள் ஒரு துணிப்பையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பால்துரை, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், அந்த நகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பால்துரை, அவருடைய மருமகனான திருச்செந்தூரைச் சேர்ந்த தங்க திருப்பதி (40) ஆகிய 2 பேரும் சேர்ந்து, நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

பேராசையால்...

கடந்த 22-ந்தேதி இரவில் பால்துரையின் பூர்வீக ஓட்டு வீட்டின் மேற்கூரை ஓடுகளை மர்மநபர்கள் பிரித்து உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு நகை, பணம் எதுவும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மறுநாள் காலையில் பால்துரை தனது பூர்வீக வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து தன்னுடைய மருமகனான திருச்செந்தூரைச் சேர்ந்த தங்க திருப்பதியிடம் தெரிவித்தார்.

அப்போது தங்க திருப்பதி தன்னுடைய மாமனாரிடம், பூர்வீக வீட்டில் 111 பவுன் நகைகள், ரூ.2½ லட்சம் கொள்ளை போனதாக போலீசிடம் தெரிவித்தால், போலீசார் பல்வேறு வழக்குகளில் மீட்ட நகைகள், பணத்தில் இருந்து பாதியையாவது தருவார்கள் என்று கூறினார். இதனால் பேராசை அடைந்த பால்துரை போலீசாரிடம், தனது வீட்டில் 111 பவுன் நகைகள், ரூ.2½ லட்சம் கொள்ளை போனதாக தெரிவித்தார். அதன்படி பால்துரை தனது வீட்டில் இருந்த நகைகளை மறைத்து வைத்தார்.

நாடகம் அம்பலம்

இதற்கிடையே போலீசார் பால்துரையின் உறவினர்கள், உள்ளூர் நபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து கொள்ளை போனதாக கூறப்பட்ட பூட்டிய வீட்டின் கட்டிலுக்கு அடியிலேயே நகைகள் மீட்கப்பட்டன. இதையடுத்து பால்துரையின் குடும்பத்தினரிடம் போலீசார் தனித்தனியாக விசாரித்தனர்.

அப்போது பால்துரை, தங்க திருப்பதி ஆகிய 2 பேரும் சேர்ந்து நகைகள், பணம் கொள்ளை போனதாக நாடகமாடியது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜோதிடர், மருமகனுடன் சேர்ந்து நகைகளை மறைத்து வைத்து விட்டு, அவை கொள்ளை போனதாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story